நடந்து முடிந்த
JPL-2012 நிகழ்வுகளில் நானும் ஒரு அறிவிப்பாளன் என்ற வகையில் இணைந்திருந்தேன். அந்த
JPLன் நிறைவேற்று குழுவிலும் நான் ஒரு கிரிக்கட் ரசிகன் என்ற வகையில் உள்ளடக்கப்பட்டு
இருந்தேன்.
” நடன மங்கையராக இருக்கலாம், அங்குள்ள இசையாக இருக்கலாம், அங்குள்ள பிரபலங்களாக இருக்கலாம், அங்குள்ள வேறு காரணிகளாக இருக்கலாம், அவை அனைத்தும் கிரிக்கெட் மீதான கவனத்தைச் சிதைப்பனவாகக் காணப்படுவது ஆரோக்கியமானதல்ல.”
” சர்வதேச கிரிக்கெட்டே இப்படியான பின்னர் T20 கிரிக்கெட் என்றாலே இப்படித்தான் என்ற நிலை எல்லா இடமும் வந்துவிட்டதை எங்கே நிறுத்துவது? ”
“யுத்த அழிவுகள், மக்களின் வேதனைகள்
பற்றிப் பேசிப் புலம்புகின்ற அதே கூட்டம்
தான் தாங்கள் மகிழ்வாக இருக்கும் வேளைகளில் அதையெல்லாம் மறக்கும்
கூட்டமும் கூட என்பது யாருக்கும் தெரியாத ஒரு விடயம் அல்ல.”
ஏற்பாட்டாளர்களின் அடிப்படை சிந்தனை பற்றிய ஒரு வெளிப்பாடு தேவை என்ற வகையிலே
எனது தனிப்பட்ட கருத்துக்களை இங்கே பதிவிட விரும்புகிறேன். (இது JPL இன் உத்தியோக
பூர்வ அறிக்கை அல்ல. இது எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமே).
கடந்த ஒரு மாதகாலமாக
வெகு சிறப்பாக நடந்த JPLஇனை ஆரம்பிக்க வேண்டிய தேவை மற்றும் அது சார்ந்த பின்ணணிகள்
பற்றிய ஒரு சிறு அறிமுகம் தர விரும்புகிறேன்.
URFF என்பது ஒரு
நிறுவனம்(FOUNDATION). அந்த நிறுவனம் இதுவரை வடக்கில் பல அளப்பரிய காரியங்களை செய்திருக்கிறது.
குறிப்பாக
- · போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் செய்து வரும் உதவிகள் ஏராளம்.
- · சிறுவர்களின் கல்விக்காக அவர்கள் இலவச வகுப்புக்கள், தனியார் கல்வி ஏற்பாடுகள் மற்றும் அதற்கான செலவழிப்புகள்.
- · பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான உடை, காலணி, புத்தகங்கள், அப்பியாசக்கொப்பிகள், புத்தகப்பை உட்பட்ட stationary என பல விடயங்கள்
- · மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் (அவரவர் தரத்திற்கேற்ப விளையாட்டு நிகழ்வுகள்) என தினமும் அவர்கள் மேற்கொள்ளும் சேவைகள் எண்ணிலடங்காதவை.
- · பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக அவர்கள் மேற்கொள்ளும் சேவைகளும் வர்ணிக்க முடியாதவை.
- · போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் குடும்பங்களுக்கு உதவி செய்தல், அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பினை வழங்குதல் என ஏராளம்.
- · பின்தங்கிய பிரதேசங்களில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சுகாதார குறைபாடுகளால் நோயுற்று வைத்தியம் செய்வதற்கு கூட வசதியில்லாத பிரதேச மக்களுக்கு வைதியத்திற்கு ஏற்பாடு செய்தல் என அவர்களின் சமூக சேவை பட்டியல் நீளும், இதை விட
- · இள வயது கர்ப்பம் தொடர்பான ஏராளமான பிரச்சினைகளை அவர்கள் நாளாந்தம் கையாண்டு வருகின்றனர்.
இவையனைத்தும் இந்த
JPL இனை நடாத்திய URFF நிறுவனத்தின் செய்றபாடுகளின் ஒரு சிறு பகுதி விளக்கம். இவை அரசியல்
கொள்கைகளின் எதிர்ப்பான போக்கின் காரணமாக எந்த பத்திரிகைகளிலும் இந்த நிறுவனத்தின்
சேவைகள் பிரசுரிக்கப்படுவதில்லை. பதிவர்களுக்கும் இது பற்றி தெரியவும் வாய்ப்பில்லை.
எனக்கு இது எவ்வாறு தெரிய வந்தது எனில் இந்த JPL ல் நான் இணைந்ததை தோடர்ந்து அவர்களுடன்
சில நாட்கள் கழிக்க நேரிட்ட போது ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்திற்கு வருவதையும், ஏராளமான
பிரச்சினைகள் அங்கே கலந்துரையாடப்படுவதையும் பார்த்ததன் மூலம் தான். எனவே நான் இட்ட
பட்டியலும் எனக்கு தெரிந்த விடயங்களும் ஒரு சிறு பகுதிதான். என்னை விட பதிவராக இருக்கிற
உஷாந்தனுக்கு இன்னும் கொஞ்சம் அதிகம் தெரிய வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர் அந்த நிறுவனத்தினுடைய
ஒரு ஊழியர். இருந்தாலும் எந்தவொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட வகையில் செய்யப்படும்
உதவிகள் அங்கிருக்கும் சக ஊழியருக்கு கூட தெரியாதவண்ணம் பேணப்படுவதையும் நான் அவதானித்தேன். (இவற்றை
நான் அவதானித்திருக்கிறேன் என்பது கூட அந்த நிறுவனத்தாருக்கு தெரிந்திருக்குமென நான் நம்பவில்லை).
இப்படி ஓரு சமுக
வேலைத்திட்ட பின்னணி உள்ள இந்த நிறுவனத்திற்கு பல்வேறுபட்ட எதிர்ப்புக்கள் இருந்தன.
அது மட்டுமல்லாது எந்த பத்திரிகைகளுமே இவர்களது செயல்பாடுகளை பிரசுரிப்பதில்லை. அதற்கான
காரணங்களை நான் ஆராய்ந்த போது அந்த நிறுவனத்தினுடைய அரசியல் கொள்கைகள் எமது பிரதேசத்தின்
மேல் மட்ட மக்களின் (மேல் மட்டம் என நான் கூறுவது தமது தேவையை தாமே பூர்த்தி செய்து
வாழும் பண வல்லமையை இன்னமும் முழுமையாக இழக்காத மக்களை) அரசியல் கொள்கைகளுடன் மாறுபட்டு
காணப்படுவது என்பது மட்டும் தான் என அறிந்து கொண்டேன். அரசாங்கத்துடனும் இராணுவத்துடனுமான
எதிர்ப்புகொள்கைகளினை அடிப்படையாக கொண்ட அரசியலை அந்த நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை
என்பது தான் எமது மேல் மட்ட மக்கள் அந்த நிறுவனத்தையும் அதன் அளப்பரிய சேவைகளையும்
வெளிப்படுத்தாமல் தவறியதன் காரணமாக இருக்கலாம்.
இந்த இடத்தில்
நான் மேலும் சில கருத்துக்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாம் அனைவரும் தினமும்
காலையில் பல் துலக்கும் போது இரண்டு விடயங்கள் எம்மை அறியாமல் எமது மனத்தினுள்ளே அழுந்தியிருக்கும்.
ஒன்று எனது பல்லு சுத்தமாக இருக்க வேண்டும், இரண்டாவது எனது பல்லு வெளுப்பாக இருக்க
வேண்டும். அந்த இரண்டாவது நோக்கம் ஏன் எனப்பார்த்தால் அது ஒரு தனி மனித விளம்பரத்திற்காக.
இப்படி நாம் தினமும் மேற்கொள்ளும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் கூட நாம் எங்களை அறியாமலேயே
ஒரு விளம்பரத்தை விரும்புகிறோம். அதனால் வரும் இலாபத்தயும் அடைகிறோம். அது போலவே அந்த
நிறுவன உரிமையாளரிடமும் நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பும் இருக்கும் என்பதில் எனக்கு ஏதும்
ஐயமில்லை.
என்னை பலர் கேட்ட
கேள்வி “அவரது அரசியல் தெரியாமல் அதுவும் அவரது நுண்ணரசியல் தெரியாமல் நீ செயல்படுவது
கவலைக்குரியது” என்பது. அந்த அடிப்படை அறிவு இருப்பதால் தான் எனக்கு இந்த வசனத்தை சொன்னவர்களின்
நுண்ணரசியலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பது எனது வியாக்கியானம்.
ஒரு தேர்தலுக்கு
முன்னர் நாற்பது சுவரொட்டிகளை கொடுத்து வாக்கு வாங்கும் எமது அரசியலை விடவும், தேர்தலுக்கு
முன்னர் திறப்புதொடுவான் (key tag) கொடுத்து வாக்கு வாங்கும் அரசியலினை விடவும் மக்களுக்கு
அளப்பரிய காரியங்களை செய்து அதன் மூலம் நுண்னரசியலை பரப்புவது எவ்வளவோ மேல் என நினைக்கிறேன்
நான்.
இதுவரையிலும் நான்
அந்த நிறுவன உரிமையாளரின் அரசியல் கொள்கை பற்றியோ அல்லது பொதுவாக மேலோட்டமாக மேல்மட்ட
மக்களால் பின்பற்றப்படும் அரசியல் நிலைப்பாடு பற்றியோ எனது நிலைப்பாடு பூச்சியம் தான்.
அதை நான் இங்கு தெளிவாக முன்வைக்க விரும்புகிறேன். நான் என்னை எந்த அரசியல் பார்வையிலும்
பார்க்கப்படுவதை விரும்பவில்லை அது தவிர நான் எந்த அரசியல் போக்கிலும் இருக்கவும் விரும்பவில்லை.
இத்துணை விவரங்களையும்
நான் வெளிப்படுத்த வேண்டியதன் காரணம், ஒருவரின் வலைப்பதிவு. நாட்டில் எவ்வளவு துயரங்கள்
இருக்க பனம் செலவழித்து ஒரு நிகழ்ச்சி வைத்ததை வசைபாடி ஒரு பதிவு எழுதி அதில் குறிப்பாக
என்னையும் அறிவிப்பாளர் என விழித்து அவர் எழுதியிருந்தார். அவர் எனது பல்ய நன்பன் என்பதால்
அவருக்கு என்னைப்பார்த்து கேள்வி கேட்க எல்லா உரிமையும் உள்ளது. இருந்தாலும் மேற்படி
விடயங்கள் அவருக்கு தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை அப்படி அவை அவருக்கு தெரிந்திருந்ந்தால்
மேற்படி வினாக்கணைகளின் எண்ணிக்கையை அவர் குறைத்திருப்பார். பகிரங்கமாக அவர் முன்வைத்த
வினாவாதலால் அவருக்கு பகிரங்கமாகவே பதிலளிக்கிறேன். ஆயினும் அவரைப்போல் கேலிப்பாணியிலல்லாது
நான் நட்பு பாணியிலேயே எனது பதில்களை எனது நண்பருக்கு முன்வைக்க விரும்புகிறேன்.
தொடர்ந்து JPL
பற்றிய விடயங்களை ஆராய்வோம்.
JPL என்பது தமிழ்
துடுப்பாட்ட வீரர் ஒருவரை தயார் செய்யும் ஒரு விடயத்தில் தோன்றிய எண்ணக்கரு.
இந்த இடத்தில்
நான் ஸ்போர்ட்ஸ்களம் என்ற இணைய சஞ்சிகையில் இடப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட பதிவின் சில
விடயங்களை வைத்து JPL தோன்றிய கதையை சித்தரிக்கலாம் என உள்ளேன். அதில் விளையாட்டு வீரர்களின்
விளையாட்டு முறை மற்றும் தரம் பற்றி அவர்களுடன் பேசிய போது
இதே பிரச்சினையை
எதிர்கொள்வதற்கு சிறப்பான போட்டிகள், மக்கள் ஆதரவு நிறைந்த கிரிக்கட், அனுசரணையாளர்கள்
போட்டிகளுக்கான ஊதியம், கழகங்களுக்காக பயிற்றுவிப்பாளர் உபகரனங்கள் என பல விடயங்களின்
அத்தியாவசியத்தன்மை அறியப்பட்டது. எமது பார்வையாளர்களை அதிகரித்தால் அனுசரனையாளர்கள்
அதிகரிக்கும். அனுசரணையாளர்கள் அதிகம் இருக்கும் பட்சத்தில் போட்டிகளில் விளையாடுவதற்காக
ஊதியம் வழங்ககக்கூடிய நிலை ஏற்படும். இந்த நிலை இருப்பின் கழகங்களுக்கு அனுசரனை கிடைக்கும்.
அதனால் பயிற்றுவிப்பாளர் மற்றும் உபகரனங்களை கழகங்கள் பெற்றுக்கொள்ளும். கழகங்களில்
விளையாடுவதற்கு போட்டி அதிகரிக்கும். இதனால் வீரர்களின் திறைமை அதிகரிக்கும் என பல
கோணங்களில் சிந்திக்கப்பட்டது. அந்த அடிப்படையில் வசதிகள், விளம்பரங்கள், கவர்ச்சிகள்
நிறைந்த போட்டியின் அவசியம் தேவைப்பட்டது. இருபதுக்கு இருபது போட்டியால் திறமையான துடுப்பாட்ட
வீரர்களை தருவித்து விட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் துடுப்பாட்டத்தின்
ரசிகர்களை அதிகரிக்க முதல் படியாக இந்த சுற்றுப்போட்டி ஒரு விளம்பரப்படுத்தலாக அமையும்
என்பது தான் நோக்கமாக இருந்தது.
இம்முறை முதல்
முறை என்பதால் பணப்பரிசில்களை அள்ளி வழங்க முடியவில்லை. அனால் நிச்சயம் அடுத்த தடவை
அனுசரனையாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் பணப்பரிசில்கள் வழங்கப்படும் என்பதில் ஐயமில்லை.
தொடர்ந்து இடம்பெறும் நிகழ்ச்சிகளில் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படலாம். அவ்வாறு துடுப்பாட்ட
திறன் அதிகரிக்கப்படுகையில் சிறந்த மைதானம் அமைக்கப்படலாம். எனவே JPL காணும் கனவுகள்
ஏராளம். அது அவற்றை நிஜமாக்க உறுதியுடன் செயற்படும்.
அணியும் கால் தடுப்புக்கள், தலைக்கவசங்கள், ஏனைய காப்புக்கள், துடுப்புக்கள் ஆகியனவற்றிற்கு பலமான குறைபாடு காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
துடுப்பெடுத்தாடி ஆட்டமிழந்து வரும் துடுப்பாட்ட வீரரின் துடுப்பையும், தலைக்கவசத்தையும், கைக் கவசங்களையும் உள்நுழையும் வீரர் வாங்கிக் கொண்டு துடுப்பெடுத்தாடச் செல்வதை அனேகமான சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிந்தது.
மேற்படி பதிவும்
குறித்த இணையத்தின் பக்கத்தில் கானப்பட்டது. இம்முறை JPL ல் ஒவ்வொரு அணிக்கும் வர்ண
உடை, பயிற்சிக்காக வெள்ளை பந்துகள், 4 கால்கவசம், 4 தலைக்கவசம் என்பன 8 அணிக்கும் வழங்கப்பட்டது.
அடுத்த முறை நிச்சயமாக இந்த அன்பளிப்புகள் பன்மடங்காகும். இது தான் திட்டம். இம்முறையும் வழங்கப்பட்டு இருந்தது என்பதை இங்கே
குறிப்பிட விரும்புகிறேன்.
” நடன மங்கையராக இருக்கலாம், அங்குள்ள இசையாக இருக்கலாம், அங்குள்ள பிரபலங்களாக இருக்கலாம், அங்குள்ள வேறு காரணிகளாக இருக்கலாம், அவை அனைத்தும் கிரிக்கெட் மீதான கவனத்தைச் சிதைப்பனவாகக் காணப்படுவது ஆரோக்கியமானதல்ல.”
நிச்சயமாக இதை
நாங்களும் தான் விரும்பவில்லை. ஆனால் இந்த நிகழ்வினை பலர் பேசும்வகையில் நடாத்த வேண்டும்
என்பது தானே அவசியம் என்பது நான் மேலே கூறிய விடயங்களில் இருந்து புரிய முடிகிறது.
தொடர்ந்து எமக்கு பத்திரிகைகளின் ஆதரவு பற்றிய சந்தேகங்களும் இருந்தது. இவற்றை இவ்வாறு
பிரமாண்டம் செய்தால் மட்டுமே இவை மக்களை சென்றடையும் என்பது யதார்த்த உன்மை. மேற்படி
காரணங்களுக்காக இந்த நிகழ்வுக்கு என ஒரு இசை வெளியிட வேண்டிய தேவை, பிரபலங்களை அழைத்து
பிரபலப்படுத்த வேண்டிய தேவை, நடன மங்கயரை அழைத்து நாமும் சர்வதேச ஸ்ரைலில் ஒரு போட்டி
நிகழ்த்துகிறோம் என விளம்பரப்படுத்த வேண்டிய தேவை என பலதரப்பட்ட தேவைகள் ஏற்பட்டன.
அடுத்த தடவை இந்த நிகழ்ச்சிக்காக ஒரு Ambassador ஐ நியமித்தாலும் தவறில்லை என்ற நிலையில்
எமது தேவைகள் அதிகமாக்கப்பட்டன. எமது பிரதேசத்திலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள்
மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் போன்றன இந்நிகழ்வு பற்றிய எந்த வொரு செய்தி வெளியீட்டையும்
இதுவரை செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் நடன மங்கையர்
விவகாரம் நாம் ஏலவே எதிர்பார்த்ததும் தான். அந்த இடத்தில் விளம்பரம் என்பது தான் மீண்டும்
முக்கியமாக இருந்தது. நடைபெற்ற 13 போட்டிகளுக்கும் திரண்டிராத மக்கள் வெள்ளம் இறுதிப்போட்டிக்கு
திரண்டுதான் இருந்தது. இதை இல்லை என்று சொல்ல முடியாது. கிரிக்கட் ஆர்வலர்களாக இதை
எதிர்க்கலாம். பொதுவாக கிரிக்கட் ஆர்வலர்கள் கிரிக்கட் ரசிகர்கள் கிரிக்கட் பார்த்தால்
போதும் என நினைப்பார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் எமது பிரதேசத்தில்
தூய கிரிக்கட்டுக்கு இருக்கும் ஆதரவு என்றால் அது BIGMATCHES ற்கு மட்டும் தான். நானே
எத்தனையோ கழகப்போட்டிகளை தனியாளாக நின்று பார்த்திருக்கிறேன், முகப்புத்தகத்தில் படங்களை
பிரசுரித்தும் இருக்கிறேன். ஆனால் இன்று நடனமங்கையர் படத்தை போட்டு கூச்சலிடும் எத்தனை
என் முகப்புத்தக நண்பர்கள் அந்த ஆபாசமற்ற கலாசார சீரழிவற்ற துடுப்பாட்ட நிகழ்வுளின்
படங்களை like பண்ணினார்கள்?. அவற்றை பற்றி ஒரு வசன comment கூட அடிப்பதில்லை. பாவம்
அந்த போட்டியில் விளையாடியவர்கள் மாத்திரமே வந்து தமது படத்திற்கு தாமே like போட்டு
commentஉம் இட்டு செல்வார்கள். ஆனால் இன்று JPLல் இடம்பெற்ற விளையாட்டை பற்றி பேசாவிட்டாலும்
அந்த நிகழ்வைப்பற்றி பேசுகிறார்கள். அடுத்த தடவை நிச்சயம் கவனிப்பார்கள். காலப்போக்கில்
இந்த விளம்பரப்படுத்தல்களின் தேவை குறைந்து விளையாட்டின் தரம் மட்டுமே தேவை என்ற நிலை
வரும். அப்போது தரத்தை கூட்டுவதற்கு தேவையான எல்லா வசதிகளும் (போதுமான popularity மற்றும்
வேண்டியளவு அனுசரனை) கிடைக்கப்பெற்றிருக்கும் என்ற கனக்கினடிப்படையில் தான் இந்த
RISKஇனை இடுக்க JPL நிர்வாக குழு முடிவெடுத்தது.
அந்த வகையில் எதிர்பார்த்ததைப்போன்றே
பல ஆதரவுகளும் எதிர்பார்த்த அளவை விட அதிகப்படியாக விமர்சனங்களும் எழுந்திருந்தன. ஆனால்
விமர்சனம் மூலம் இந்த நிகழ்வு சர்வதேச தரம் வரை உயர்ந்திருக்க்கின்றது என்பது மறுக்க
முடியாத உன்மை. அடுத்த தடவை எமக்கு போதிய ஆதரவுகள் அனுசரனைகள் கிடக்கும் பட்சத்தில்
மேற்படி விமர்சன விடயங்களை தவிர்த்து நிகழ்வினை மெருகூட்ட முடியும் என்பதிலும் ஐயமேதுமில்லை.
JPL என்பது ”ஓவர் நைட்டில ஒபாமா ஆகிற விடயம்” இல்லை. இது JPL இன் முதலாவது வயது. பருவ
வளர்ச்சியுடன் ஏற்படப்போகும் பல நல்ல காரியங்கள் JPLன் கனவு.
இருந்தாலும் ஆபாசமற்ற
நடனம் மாத்திரமே மேடையேற்றப்படுகின்றது என்பதை நாம் அனைவரும் உறுதி செய்தே மேடையேற்றினோம்.
அவர்களது ஆடைகளும் ஆபாசமற்று இருக்க வேண்டும் என்பதில் நிர்வாகம் அதிக அக்கறை எடுத்திருந்தது
என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது. விளம்பரத்திற்காக எதையும் செய்யும் நிலமைக்கு நாங்கள்
செல்லக்கூடாது என்பதிலும் JPL நிர்வாகம் உறுதியாகத்தான் இருந்திருக்கிறது.
இது தவிர யாழ்ப்பானம்
இந்துக்கல்லூரி மைதானத்தில் மேற்படி நிகழ்வு நடந்ததை பலர் விமர்சித்திருந்தனர். உன்மைதான்
ஒரு பாடசாலை மைதானத்தில் ஒரு தனியார் விளம்பர மற்றும் சமுக நிகழ்ச்சியொன்று இத்துனை
நிகழ்வுகளுடன் நடைபெறுவது தவறு தான். ஆனால் என்னிடம் இரண்டு விளக்கங்கள் இருக்கின்றன.
இவை இரண்டிற்குமான பதில் கிடைக்கும் பட்சத்தில் அந்த மைதானத்தில் தொடர்ந்தும் JPL நடத்தப்படாமல்
இருக்கும் என நம்புகிறேன்.
·
யாழ்ப்பாணத்தில்
மக்கள் நடமாட்டம் கூடிய இடத்தில் அதாவது குறித்த மைதானம் இருக்கும் இடத்தில் அந்தளவு
வசதிகளுடன் வேறு எந்த மைதானங்களும் இல்லை..
·
யாழ்ப்பாணத்தில்
இடம்பெறும் பொதுவான மைதான நிகழ்ச்சிகளில் 90% அந்த மைதானத்தில் தான் நடக்கின்றது. காரனம்
அதன் அமைவிடம்.
ஒரு பாடசாலை மைதானத்தில்
வெளி நிகழ்ச்சிகள் நடப்பது கூட அந்த பாடசாலையில் தனித்துவததை சீரழிப்பதும் கேவலப்படுத்துவதும
தான். அந்த மைதானத்தில் இனம்தெரியாதோர், மாணவரல்லாதோர் விளையாடுவது கூட அந்த பாடசாலையில்
கலாசார பண்பாடுகளை மறுப்பதற்கு ஒப்பானது தான். மாணவரல்லாதோர் அங்கு விளையாடி அந்த பாடசாலை
மைதானத்தை சீராக பாதுகாக்க இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்பது பாடசாலை நிர்வாகத்தின்
தசாப்த கால குற்றசாட்டு. இவையனைத்தின் போதும் குரல்கொடுக்காத இந்த பாடசாலை சமுதாயத்தின்
ஆர்வலர் சிலர் தற்போது JPLற்கு மாத்திரம் குரலை உயர்த்துவது அவர்களின் தனிப்பட்ட பகையுணர்வையும்
காழ்ப்புணர்ச்சியையும் வெளிக்காட்டுவதாகவே அமைகிறது. பாடசாலை விளையாட்டு மைதானத்தில்
எத்துணை விளையாட்டுக்கள் அல்லாத நிகழ்வுகள் இதுவரை நடந்திருக்கின்றன. கோஷ்டிகள், இசைக்கச்சேரிகள்
என எண்ணற்றவை. இவைபற்றி எவரும் தட்டிக்கேட்கவில்லை.
தட்டிக்கேட்ட போது
என் காதுகளுக்கு எட்டிய பதில் ”அந்த மைதானம் மக்கள் சந்தடி உள்ள இடத்தில இருக்குது
தம்பி. சமுக நிகழ்ச்சிகளை நாங்கள் செய்யக்கூடாது எண்டு தடுக்க ஏலாது. எங்களுக்கும்
சமுதாய கடமை இருக்கு. இது மக்கள் அன்பளிப்பாக வழங்கிய காணிகள் தான்.” என பலதரப்பட்ட நியாயங்கள்.
இன்று JPLம் இதே நியாயத்தை சொல்லலாம். ஆனால் வேறு மைதானம் அமைக்கும் வரை இவ்வாறான இரவல்
மைதானங்களில் நடாத்துவோம். விரைவில் எமக்கான பொது மைதானம் அமைக்கப்படும் அப்போது அவற்றை
நாங்கள் மாற்றியமைப்போம் என்பதே JPL ன் நிலைப்பாடு.
அறிவிப்பாளன் என்ற
வகையில் என்னிடம் அங்கு வந்திருந்த அர்ஜுண ரணதுங்கவிடம் கேட்கும் படி சில வினாக்கள்
தரப்பட்டது. அதில் ஒன்று இரண்டை நான் ஒலிவாங்கி சீரில்லாததால் கேட்க முடியாமல் போனது.
அதாவது யாழ்ப்பாண மக்களுக்கு கிரிக்கட் சார்பாக நீங்கள் என்ன செய்ய முடியும். பயிற்சி
முகாம்கள், அல்து மைதான அமைப்பு போன்ற எதாவது செய்து தருவீர்களா? என ஒரு வினா எனக்கு
தரப்பட்டிருந்தது. ஆனால் அது தவறவிடப்பட்டு விட்டது. இதை ஏன் இவ்விடத்தில் குறிப்பிடுகிறேன்
என்றால், யாரையும் சும்மா கூப்பிடுவதில்லை. வாறவர்களிடமிருந்தும் ஏதாவது நன்மைகள் கிடைக்கும்
என்ற எண்ணத்தில் தான் அழைப்போம். நிச்சயமாக அங்கு வருகை தந்த அர்ஜுண ரணதுங்க, தான்
எமது இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றினை வழங்க தயாராக உள்ளேன் என தெரிவித்திருந்தார்.
அதை மேற்கொள்வதற்கான முயற்சியில் JPL நிர்வாகம் ஏற்கனவே களமிறங்கி விட்டது. ஆனால்
JPL மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னமும் ஓயவில்லை.
தொடர்ந்து ராணுவம்
பயன்படுத்தப்பட்டது பற்றிய விமர்சனம் எழுப்பப்பட்டிருந்தது. அது இன்று யாழ்மண்ணில்
நிகழ்வுகளை நடத்தும் எவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய ஓரு விடயம். தூர இருந்து கருத்து கூறும் கந்தசாமிகளுக்கு அது
ஒரு விமர்சனப்புள்ளி. அவ்வளவு தான். இந்த JPL சுற்றுப்போட்டியினை நடாத்துவதற்கான சகல
மனிதவள தேவைகளையும் படையினர் செய்திருந்தது நான் நேரடியாக அவதானித்த ஒன்று. கொடிக்கம்பங்கள்,
மைதானம் கூட்டுதல், பெருக்குதல் வாகன உதவி, பிந்தங்கிய பிரதேச சிறுவர்களை அழைத்து வந்த
வாகனம் என பல விடயங்களை எந்தவொரு செலவும் இன்றி அவர்கள் செய்து கொடுத்திருந்தனர். அந்த
மனிதவள உதவியினை எவனாச்சும் ஒரு விமர்சகன் வந்து செய்திருந்தாலும் ஒரு படைவீரனின் பிரசன்னம்
தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே ரோசமுள்ள விமர்சகர்கள் இப்படியான கூட்டுதல் பெருக்குதல்
போன்ற வேலைகளை அடுத்த தடவை செய்து தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தவிர கஷ்டப்படும்
தமிழர்களுக்கு வேலைவழங்கியிருக்கலாமே எனவும் கேட்கலாம். அதுவும் வழங்கப்பட்டு இருந்தன.
ஆனால் அவர் எந்த வேலையும் செய்யாமல் சுத்தித்திரிந்து சம்பளம் மாத்திரம் வேண்டினார்.
நாட்டப்பட்டிருந்த கொடித்தம்பங்களிலிருந்த கயிற்றைக்கூட மூன்று தடவை களவாட எங்கள்
பிரதேசத்தில் கள்ளர் இருந்திருக்கிறார்கள். அதற்காக எம்மவர் ஒருவர் பாதுகாப்பு கடமையிலும்
ஈடுபடுத்தப்பட்டிருந்தார். நான்காம் தடவை அந்த பொறுப்பையும் ராணுவம் செய்தது.
எம்மவர் கைகோர்த்து
நின்றால் எமக்கு எவரின் உதவியும் தேவைப்பட்டிராது. ஆடலும் தேவையில்லை பாடலும் தேவையில்லை
பிரபலங்களும் தேவையில்லை போட்டி நடக்கும்போது வீட்டில் வெட்டியாய் நாடகம், மானாட மயிலாட, செல்வி
பார்த்து ஏப்பம் விடுபவர்கள் கிரிக்கட்டை பார்த்து வீரர்களுக்கு உற்சாகம் வழங்கியிருந்தால்
இந்த JPLஏ தேவைப்பட்டிருக்காது.. ஆனால் அதை நாம் செய்யவில்லை என்பது தான் உன்மை.
எம்மவர் ஒருவரின்
பிரசன்னம் எம்மில் ஒரு வீரரை உருவாக்கும். அதற்கு ஒரு உதாரனம் சொல்கிறேன்.
எங்கள் பாடசாலையில்
நான் படிக்க செண்ற முதல் வருடம் எங்கள் பாடசாலை மாணவ முதல்வன். அவரை கண்டாலே எங்களுக்கு
சச்சின் டெண்டுல்கர், அரவிந்த டீ சில்வா, ராகுல் டிராவிட் என்று எமக்குத்தெரிந்திருந்த
அத்தனை வலதுகை துடுப்பாட்ட வீரரும் நினைவுக்கு வருவினம். அப்படி ஒரு நம்பிக்கையான துடுப்பாட்ட
வீரர். அவர் அந்த காலத்திலயே இலங்கை அணிக்கு செல்வார் என எதிர்பார்த்திருந்தனாங்கள்.
ஆனால் அவர் கனாடாவுக்கு போயிட்டார். அங்கு அவர் கனேடியன் கவுண்டி அணி ஒன்றில் விளையாடி
சாதனைகளை கூட வைத்திருக்கிறார் என அறிந்தேன். ஜே பி எல் என் சிறந்த துடுப்பாட்டகாரர்களில்
ஒருவர். அவரது தந்தை இவர் விளையாடும் போட்டிகளை
முடிந்தவரை வந்து மதிலோரம் நின்று பார்ப்பாராம். இவர் ஆட்டமிழந்த முறைகளை பற்றி வீட்டில்
அலசுவாராம், அந்த அண்ணன் தற்போது திருமணம் ஆகி யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். அவர்
யாருமல்ல எங்கள் கார்த்திக் அண்ணன் தான்.
இதை நான் இங்கே
குறிப்பிட்டதன் நோக்கம். ஒரு பார்வையாளன் எவ்வளவு தூரம் ஒரு விளையாட்டு வீரனில் செல்வாக்கு
செலுத்தலாம் என்பது. இந்த பார்வையாளர்கள் டம்மி பீஸ் ஆக இருந்தாலும் அவர்களின் பிரசன்னம்
பல விடயங்களை சாதிக்கவல்லது. பாலினை விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ பருகலாம்.
ஆனால் பாலின் சுவை மற்றும் அதன் சத்து அளவு எல்லாச்சந்தர்ப்பங்களிலும் மாறாது.
இந்த அடிப்படையில்
ஏற்படுத்தப்பட்டது தான் JPLன் விளம்பரங்கள். இன்று பலர் விளம்பரத்தை பற்றி மட்டுமே
பேசி அந்த அத்தியாவசிய கடமையை செய்யாமல் இருக்கின்றனர். JPLஐப்பொறுத்தவரை அதுவும் வெற்றிதான்.
அனால் விமர்சகர்களில் பலர் எனது நண்பர்களாக இருந்ததால் உன்மைய விளக்கலாம் என முனைந்த
வேளை பலர் தனிப்பட்ட எதிர்ப்புகளை கூட காட்டினர். அதன் பின்னர் தான் நான் புரிந்து
கொண்டேன் விளங்கப்படுத்த முனைந்தது என் தவறு என்று. அவர்களும் எங்களுக்கு விளம்பரம்
தானே செய்கிறார்கள் என்று.
” சர்வதேச கிரிக்கெட்டே இப்படியான பின்னர் T20 கிரிக்கெட் என்றாலே இப்படித்தான் என்ற நிலை எல்லா இடமும் வந்துவிட்டதை எங்கே நிறுத்துவது? ”
இதே வினாவினைத்தான்
நானும் கேட்கிறேன். எங்கே நிறுத்துவது. அவர்களுக்கே விளம்பரம் தேவைப்படுகிறது. அப்போ
நாங்கள் என்ன செய்வது. நாங்கள் நிச்சயமாக கிரிக்கட்டை அழிக்கவில்லை. வளர்க்க முனைகிறோம். ஆனால்
அழிவின் பிடியிலிருந்து. அவ்வளவு தான். நாம் சர்வதேச ரீதியில் அனுசரிக்கப்பட்டால் எமக்கான
தனித்துவத்துடன் செய்து இருப்போம். இனி அனுசரிக்கப்பட்டால் நிச்சயம் எமது தனித்துவத்தை
பறை சாற்றுவோம்.
“யுத்த அழிவுகள், மக்களின் வேதனைகள்
பற்றிப் பேசிப் புலம்புகின்ற அதே கூட்டம்
தான் தாங்கள் மகிழ்வாக இருக்கும் வேளைகளில் அதையெல்லாம் மறக்கும்
கூட்டமும் கூட என்பது யாருக்கும் தெரியாத ஒரு விடயம் அல்ல.”
இது எனது நண்பர்
ஒருவர் என்னிடம் தெரிவித்த கருத்து ஒன்றுதான். ”இவ்வளவு மக்கள் கஷ்டப்படீனம் இந்த நிலையில்
இப்படிப்யொரு நிகழ்வு தேவையா?” என்று. ஆனால் இந்த நிகழ்வை நடாத்தியவர்கள் கஷ்டப்பட்ட
மக்களுக்கு எவ்வளவோ இதுவரை செய்திருக்கிரார்கள். இனியும் செய்யப்போகிறார்கள். ஆனால்
அந்த விமர்சனத்தை சொன்னவர் என்னுடன் இணைந்தே எத்தனையோ அநாவசிய களியாட்டம் செய்திருக்கிறார்.
நான் நேரடியாகவே அவரிடம் கேட்டேன் ”மச்சி நானும் நீயும் சந்தோசமாய் செலவளிக்கும் போது
என்றாவது ஒரு நாள் யோசிச்சிருக்கமாடா?” என்று. அவர் மௌனம் சாதித்து பதில் தேடினார்.
நான் தொடர்ந்தேன் ”நாம செஞ்சா நமக்கு அது சரி மற்றவன் செஞ்சா அது நமக்கு பிழை. இதுவாடா
உன் நியாயம்?” என்றேன் அதற்கு அவன் “டேய் நாங்கள் நம்ம காச நமக்கு செலவளிக்கிறம், அவன்
தன்ர காசை மற்றவங்களுக்கில்லோ செலவளிக்கிறான். இது ரெண்டும் ஒண்டில்லை மச்சான்” என
சொல்லி நீண்ட சிரிப்பு சிரித்து கதையை முடித்து, மௌனமாக தலையை ஆட்டி “எப்ப
கொழும்பு வாறாய் மச்சான்” என்றான்.
இதில் மேலுமொரு
நண்பன் எனது கொள்கைகள் பற்றி விமர்சனம் செய்திருந்தார். ”அப்துல் கலாம் வந்ததையே விமர்சிச்ச
நீ இதுக்கு மட்டும் வக்காளத்து வாங்குகிறாய் ஏனெனில் நீ இந்த JPLல் அழைக்கப்பட்டிருந்தாய்”
என்று.
நிச்சயமாய் அப்துல்
கலாம் வந்ததை எமது கல்லூரிக்கு பெருமை என பறை சாற்றுவதை விட அது மது கல்லூரிக்கு விளம்பரம்
என சொல்லுவதே சரி என்பது எனது வாதம். எமது கல்லூரியுடன் ஒப்பிடுகையில், எமது கல்லூரி
பெற்ற சாதனை மனிதர்களுட ஒப்பிடுகையில் கலாம் எம் தாயை வணங்க வந்த ஒரு யாத்திரி. வேணுமென்றால்
அது கல்லூரிக்கு ஒரு விளம்பரமாக கொள்ளலாமே தவிர காலாம் எமது கல்லூரிக்கு வந்தது கல்லூரிக்கு
வரப்பிரசாதம் என சொன்னதை நான் ஏற்கவில்லை. எனது அந்த கருத்திற்கும் நடன மங்கையர் விவகாரத்தில்
எமது நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்ய நடனம் ஆடினோம் என சொன்னதற்கும் கருத்து பிறழ்வுகள்
இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி நான் கருத்து பிறழ்ந்திருந்தால் என்னில் தவறு
உள்ளது. சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன். ஆனாலும் அந்த நண்பன் என்னை மாத்திரமே
சாடியிருந்தாரே தவிர அந்த நிகழ்வினை அல்ல. ஏனெனில் அவர் ஒரு விளையாட்டு வீரராகவும்
நமது போட்டிகளை ரசிக்கும் ரசிகனாகவும் இருந்திருக்கின்றார்.
விமர்சிப்பவர்கள்
தெரியவேண்டிய ஒன்று. JPL என்பது எமது பிரதேச கிரிக்கட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக
இருக்கும் மிகமுக்கிய பிரச்சனை ஒன்றை உடைத்தெறிய தயார்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு
கிரிக்கட் போட்டியையும் மக்கள் பார்த்து ரசிக்க வைக்க வேண்டும். கிரிக்கட் ஆர்வலர்கள்
TVயில் மட்டும் கிரிக்கட் பார்க்காது நம்மவர்கள் ஆடும் ஆட்டத்தையும் பார்க்க வேண்டும்.
அந்த நிலை வேண்டும் என்ற பார்வையில் ஏற்படுத்தப்பட்டது தான் JPL. எனவே இனியாவது விமர்சகர்கள்
யாழ் விளையாட்டு நிகழ்வுகளை நேரடியாக பார்த்து ஆதரவு வழங்கினால் நல்லது. என்னைப்பொறுத்தவரை
யாழின் அதிக போட்டிகளை பார்த்த இளைஞர்களில் ஒருவனாக எனது கருத்து இங்கே விமர்சனம் கூறிய
பலர் போட்டிகளை பார்ப்பதில்லை. போட்டிகளை பார்க்கும் வழமை உள்ள எவரும் விமர்சிக்கவில்லை.
மாறாக ஆதரவு வழங்கி ஆலோசனையும் வழங்குகிறார்கள்.
எனக்கு ஒரேயொரு உறுத்தல் தான் நண்பரே... சத்தியமா எனக்கு கிரிக்கட் எண்டா என்ன எண்டே தெரியாது, அதோட நான் ஒன்றும் கலாச்சாரப் பாதுகாவலன் இல்லை, எனக்கு அந்த நடனமங்கையரோ அல்லது இராணுவப் பிரச்சன்னமோ பெரிதா தெரியலை ஏன் எண்டா நான் யாழ் மண்ணிலையே வாழ்ந்தனான் வாழுறனான் அதோட இந்தப் பதிவில நீங்க சொன்ன பெரும்பாலான கருத்தோட நான் ஒத்துப்போறன் நாங்களும் வாழத்தான் வேணும்.... ஆனா இப்ப இவளவு முற்போக்குத்தனமா பேசுற நீங்கள் இதே தளத்தில இத http://amareshg.blogspot.com/2010/11/jaffna-today.html ஏன் எழுதினனீங்கள்... ஏன் அதில உங்களுக்கு மைக் தரலை எண்டா இல்லை... இப்பதான் உங்களுக்கு முற்போக்கு சிந்தனை பிடிபட்டதா...அதில ஒரு காட்சிப் போட்டியப் போட்டு பந்தாடின நீங்கள் (யாழ் மண்ணிட கலாச்சாரத்த போற்றினனீங்கள்) இதுக்கு இப்பிடி வக்காளத்து வாங்கிறது தான் எனக்கு பிடிபடலை..... இல்லை அந்தப்போட்டி யாரிட திறமையையும் வளர்க்கலையா.... சும்மாதான் கேக்கிறன்..:(
ReplyDeletehttps://www.facebook.com/aruliniyan.mahalingam
ReplyDeleteஎனது கருத்துக்களின் மீது இவ்வளவு அக்கறையுடன் விமர்சிக்கும் அந்த தெரியாத நபருக்கு முதலில் நன்றிகள்.ஆனால் நீங்கள் மேலே குரிப்போட்ட பதிவில் நான் எதுவும் தவறான கருத்தை முன்வைத்திருந்தால் சொல்லுங்கள்..பெண்பிள்ளைகளுக்கு குடுக்கவீண்டிய பாதுகாப்பை பென்ர்ரார்கள் குடுக்கவில்லை என்பதையும் அந்த நிகழ்வில் பெண்பிள்ளைகளை அநாவசியமாக நீரம் தாழ்த்தி வைத்திருந்தார்கள் என்பதையுமே குறிப்பிட்டேன்.தலையங்கம் கொஞ்சம் காரசாரமாக இருந்தாலும் அது யாழ்ப்பான கலாசாரத்தை வியார்சிக்கும் வைகையில் இருந்திருக்கவில்லை.பெற்றோருடைய கவனயஈனத்தையும் அந்த ஏற்பாட்டாளர்களின் கவனயஈனத்தினையும் குறிப்பிட்டிருந்தேன்.அது தவிர யுவதிகளுக்கு இளைஞ்சர்கள் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவதையும் விமர்சித்து இருந்தேன். இதில் என்னில் கோபம் கொள்ள என்ன நியாயம் இருக்கின்றது. இரவு வேளைகளில் பெண் பிள்ளைகளை தனியே அனுப்பும் நிலையை ஏற்படுத்துவது அவர்களுக்கு ஆபத்தாக அமையலாம் என நான் சொன்னது தவறா..? இல்லை பள்ளிச்சிருமிகளுக்கு வயது வாலிபர்களை பயிற்றுவிப்பாளராக நியமிப்பது வர்களுக்கிடையில் கவர்ச்சியினை ஏற்படுத்தலாம்.அந்த நிலையை தவிர்க்கலாம் என நான் கஊரியது தவறா? என்மீது பிரத்யீகமாக கொண்டுள்ள காழ்ப்புனர்ச்சியினை எவரு வெளிப்படுத்த முனைவதாக தோன்றுகிறது. எதிர்ப்புக்கள் என்பது சகஜம். இது உமக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.அதற்காக நமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள முடியாது. எனது கருத்துக்களில் நான் எப்பொழுதும் தெளிவாகவே இருந்து வருகின்றேன். தவறான புரிதல்களால் நீங்கள் இவ்வாறான கருத்து மூதல்களில் ஈடுபடுகிறீர்கள் என நினைக்கிறேன். எனது கருத்துக்கள் தவறாக இருந்தால் நிச்சயமாக நீரடியாக எனக்கு அவற்றை விளங்கப்படுத்தலாம்...நான் தவறு என எட்ட்ருக்கொள்ளும் பட்சத்தில் நிச்சயமாக என் கருத்துப்பிழைகளை திருத்திக்கொள்வேன்.
ReplyDelete