Saturday, July 3, 2010

நூற்றாண்டு விழா, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, பழையமாணவர் சங்கம்-கொழும்பு.



நூற்றி இருபத்தைந்து ஆண்டுகள் பழமை நிறைந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களில் ஒன்று தனது நூறாவது பிறந்த நாளினை அன்மையில் கடந்த 26ம் திகதி தனது அன்னையின் மடியிலே மிக விமரிசையாக பெருமையுடன் கொண்டாடியது.
அந்த நிகழ்வு பர்றிய ஒரு பதிவினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் கல்லூரி வளாகம் விழாக்கோலம் பூண்டிருக்க காலை 7.00 மணியளவில் ஆரம்பமாக ஏற்பாடாகியிருந்த்து. அன்னை புதுப்பெலிவுடன் தனது புகழுக்குரிய மைந்தர்களின் வரவுக்காய் இன்முகத்துடன் இருந்ததை அங்கிருந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொள்வதாக இறுதி நேரத்திலே கிடைத்த தகவல்களை அடுத்து சற்றே கால தாமதமாக விழா ஆரம்பிக்கப்பட்ட்து. கல்லூரியிலே வீற்றிருந்து அருள் அலைகளை வழங்கி எங்கள் கல்லூரியை செழிப்புடன் காத்து வரும் எம்பெருமான் ஞானவைரவப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் நிகழ்வுகள் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது.


எங்கள் கல்லூரி ஆலய பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ.கா.சதானந்த சர்மா அவர்களின் உணர்வு பூர்வமான அபிஷேக ஆராதனைகள் அனைவரையும் பக்தி பரவசத்தில் ழ்த்தத்தான் செய்த்தது. கல்லூரி இசை ஆசிரியர் திரு.கே,பத்மநாதன் அவர்களின் வழிநடத்தலில் வளர்ந்துகொண்டிருக்கும் அடுத்த இந்துவுன் இசை வாரிசுகள் பஞ்சபுராணம் பாடியது மேலும் உணர்ச்சியூட்டியது. நுணுக்கங்கள் நிறைந்த அந்த பஞ்சபுராண பாராயணம் தருணத்திற்கு பொருத்தமான இசை நுட்பங்களை தாங்கி வந்தமை, பத்மநாதன் ஆசிரியர் அவர்கள் எனக்கு சொல்லித்தந்த இசை நுணுக்கங்களை மீட்கச் செய்தது. இப்படி எத்துணை மைந்தர்களின் மனதில் நினைவு மீட்சி நடந்திருக்கும்…....


தொடர்ந்து கல்லூரி பாண்ட் வாத்திய குழுவினர் தமது சம்பிரதாய பூர்வ மரியாதைகளை விருந்தினர்களுக்கு வழங்கி அவர்களை கல்லூரி முன்றல் வரை அழைத்து சென்று, எமது கல்லூரி 1994 உயர்தர விரிவு பழைய மாணவர்களால் அமைக்கப்பட்ட கல்லூரி அலங்கார நுழைவாயிலை திறப்பதற்காக விருந்தினரை நுழைவாயிலிலே நிறுத்த, பிரதம அதிதியாக கலந்துகொண்ட கௌரவ நீதியரசர் திரு..ஸ்ரீபவன் அவர்கள் கல்லூரி அலங்கார நுழைவாயிலை திறந்துவைத்தார்.

தொடர்ந்து பாண்ட் வாத்திய குழுவினர் அதிதியரை கல்லூரியிலே அமைக்கப்பெற்றுள்ள நாவலர் சிலையருகே அழத்துவர பிரதம அதிதி கல்லூரி நாவலர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணங்கினார். தொடர்ந்து பாண்ட் வாத்திய குழுவினர் விருந்தினர்களை குமாரசுவாமி மண்டபத்திற்கு அழைத்து செல்ல, குமாரசுவாமி மண்டப முன்றலில் கல்லூரி சாரணர் படைப்பிரிவு மற்றும் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் மண்டபத்தை வந்தடைந்தனர்.

மண்டபத்திலே யாழ்மண்ணின் புகழ் பூத்த மங்கள வாத்திய கலைஞர்கள் மங்கல இசை வழங்கியவண்ணம் இருக்க, விருந்தினர்கள் மண்டபத்தினுள்ளே நுழைந்து மங்கல விழக்கேற்றும் நிகழ்வை ஆரம்பித்தனர்.


யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ.சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் அவர்கள் குறுகிய நேர அழைப்பினை ஏற்று விழாவின் சிறப்பிற்காய் வந்தருளி மங்கல விழக்கையும் ஏற்றி விழாவை ஆரம்பித்து வைக்க, அவரை தொடர்ந்து விழாவின் பிரதம விருந்தினர் கௌரவ நீதியரசர் திரு.க.ஸ்ரீபவன் அவர்களும் அவரது பாரியாரும் மங்கல விளக்கை ஏற்றினர். தொடர்ந்து நிகழ்வின் தலைவரும் யாழ்ப்பாணம் இந்துக்கலூரி பழையமாணவர் சங்கம்-கொழும்புக்கிளையின் தலைவருமான திரு.செ.இராகவன் மற்றும் அவர்தம் பாரியாரும் மங்கல விளக்கை ஏற்றினர். தொடர்ந்து கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா, யாழ்ப்பாணம் இந்துக்கலூரி பழையமாணவர் சங்கம் லண்டன் கிளைத்தலைவர் திரு.செவ்வேள், ஜேர்மன் நாட்டின் கிளைத்தலைவர் திரு.R.C.இராமநாதன், லண்டன் கிளையின் முன்னாள் தலைவர் திரு.கேதீஸ்வரன், கொழும்புக் கிளையின் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, கொழும்புக்கிளையின் பொருளாளர் திரு.பிறேம்குமார், திரு.இராசநாயகம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பாக கல்லூரி ஆசிரியர் திரு.ஸ்ரீஸ்கந்தராஜா, கல்லூரி ஆசிரியர் சார்பாக உப அதிபர் திரு.பொ.ஞானதேசிகன், கல்லூரி மாணவர் சார்பாக செல்வன்.பே.தினேசன் ஆகியோரும் மங்கல விளக்கினை ஏற்றினார்கள்.

தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் தேவார பாராயணமும், மாண்ட இந்துவின் மைந்தர்களுக்காய் 2 நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

அடுத்தநிகழ்வாக வந்தோரை வரவேற்கும் வரவேற்புரையை பழையமாணவர் சங்கம்-கொழும்புக்கிளையின் உப தலைவர் திரு.ப.பரமேஸ்வரன் நிகழ்த்தினார். மிக நீளமான ஒரு வரவேற்புரையிலே நேர்த்தியாக பல விடயங்களை தொட்டு சென்றார். பழையமாணவர் சங்கங்களின் ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட அவர் தாய்ச்சங்கமான யாழ்ப்பாணக்கிளையின் முக்கிய பங்குபற்றியும் விளக்கி தனது வரவேற்புரையினை நிறைவு செய்தார்.

தொடர்ந்து நல்லை ஆதீன முதல்வர் விழா சிறப்புற தனது ஆசிகளை வழங்கி ஆசியுரையினை நிகழ்த்தினார். அவர் தனது ஆசி உரையிலே ஆதீனத்திற்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவினைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.


தொடர்ந்து விழாத்தலைவர் திரு.செ.இராகவன் தனது தலைமை உரையினை நிகழ்த்தினார். தலைமை உரையிலே கொழும்புச்சங்கத்தின் வளர்ச்சிப்படிகளையும் அது கல்லூரிக்கு செய்துவரும் முக்கிய பங்களிப்புகளையும் பற்றிய ஒரு விளக்கத்தினை தந்திருந்தார். மேலும் நூற்றாண்டு விழாவின் சிறப்புகள் அனைத்தையும் இலக்கண சுருக்கமாக விளக்கியிருந்தார்.

அடுத்ததாக கல்லூரியின் முதல்வர் உரை நிகழ்த்தினார். ஒரு தாய் சார்பாக தனது பிளைகளிடம் என்ன வகையில் பேச வேண்டுமோ அந்த வகையிலே கல்லூரி முதல்வரின் உரை அமைந்திருந்தது. உலகெங்கிலும் தாயின் மகிமை பாடும் மைந்தர்களை சுட்டிக்காட்ட்த்தவறவில்லை. மேலும் கல்லூரியின் தற்கால சாதனைகளையும் அதற்கான பழையமாணவர் சங்கத்தினர் செய்துவரும் பங்களிப்பினையும் குறிப்பிட்ட்துடன், தொடர்ந்தும் இவ்வாறான பங்களிப்புகள் அவசியம் என்பதனையும் குறிப்பிட்டார். நூறாண்டு அகவை காணும் கொழும்பு பழையமாணவ்ர் சங்கத்தினை வாழ்த்தவும் தவறவில்லை.

தொடர்ந்து விழாவின் பிரதம அதிதி உரை நிகழத்தினார்.அவர் தன் உரையிலே விழாவிற்கு தன்னை பிரதம அதிதியாக அழைத்தமைக்காக கொழும்பு பழையமாணவர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்ததோடு சங்கத்தின் நூறாவது பிறந்த நாளில் சங்கத்தை வாழத்தவும் தவறவில்லை. கல்லூரியின் வளர்ச்சியில் பழையமாணவர் சங்கங்களின் பங்களிப்பை மெச்சியதோடு அச் சேவைகளை தொடர்ந்த்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தனது கல்லூரிக்கால நினைவுகளையும் மீட்டு, ஆங்கிலத்திலே தனது உரையை நிறவு செய்தார்.

தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், பழையமாணவனுமாகிய ஆசிரியர் திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் “My educational Memories” நூல் விளியீடு நிகழ்ந்தது.நூலின் நீண்ட ஆய்வுரையை தொடர்ந்து எழுத்தாளர் ஏற்புரையை இலக்கணச்சுருக்கமாக நிறைவு செய்தார் நூலாசிரியர்.

தொடர்ந்து இந்துவின் புகழ்பூத்த மைந்தர்கள் கவியரங்கம் நிகழ்த்தினார்கள். இந்துவின் மைந்தனும் கோண்டாவில் இந்துமகா வித்தியாலய ஆசிரியருமான பிரபல கவியரங்க வித்துவான் திருவாளர் சிவசிதம்பரம் அவர்களின் தலைமையில் “கற்க கசடற கற்க” எனும் கல்லூரி மகுடவாசகத்தின் ஒரு பகுதியை பொருளாக வைத்து இந்துவின் மைந்தர்களான காரைநகர் உதவி அரசாங்க அதிபர் திரு.ஜெயசீலன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர் திரு.குருபரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர் திரு,பதந்தன், யாழ்ப்பாணம் மருத்துவபீட 4ம் வருட மாணவன் திரு.தர்ஷனன் ஆகியோர் பங்குபற்றி கவிமழை பொழிந்தனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக்கலூரி பழையமாணவர் சங்கம்-கொழும்புக்கிளை தமது நூறாவது ஆண்டு நிறைவையொட்டி பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்திய பேச்சு போட்டியில் கீழ்ப்பிரிவில் முதிலிடம் பெற்ற செல்வன்.சி.ஜனுபன் தனது மழலைக்குரலிலான பேச்சினை வழங்கினார்.

தொடர்ந்து இந்துக்கல்லூரி மண்டபத்தில் பாடசாலை சமுகத்தின் எந்த விழாவானாலும் சரி இசை நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது. அந்தவகையிலே கல்லூரியின் இசை ஆசிரியர்களின் வழிநடத்தலிலே கல்லூரி மாணவர்கள் பங்குபற்றிய ”இசை அமுதம்” நிகழ்வு அனைவரது காதுகளிலும் தேன் வார்த்தது. கல்லூரி மாணவர்கள் வாய்ப்பாட்டு பாட, கல்லூரி இசை ஆசிரியர் திரு.கே.பத்மநாதன் அவர்களின் வயலின் இசையுடன் கல்லூரி மாணவன் செல்வன் டினேசனின் ம்ருதங்கத்துடன் இனிதாக ஆரம்பித்தது இசை அமுதம். அதன் இரண்டாம் பகுதியிலே கல்லூரி மாணவன் செல்வன்.மதீசன் தனது திறமையை மேற்கத்தேய முறையிலே ஆடலுடன் கூடிய ROCK STYLE பாடல் ஒன்றை பாடி கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளித்தார். இசை அமுத்த்தின் மூன்றாம் பகுதியிலே குழுப்பாட்டாக பாரதியார் பாடல் ஒன்றும் பாரதி தாசன் பாடல் ஒன்றும் பாடி நிறைவு செய்தார்கள்.

அடுத்த நிகழ்வாக யாழ்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் சகோதர பாடசாலையான யாப்பாணம் இந்து மகளிர் பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் பங்குபற்றிய ”விஞ்ஞான வினாடி வினா” போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. இந்துவின் மைந்தர்களான கொழும்பு மருத்துவபீட இரண்டாம் வருட மாணவன் திரு.செ.கோகுலனின் வினாத்தொகுப்பிலே திரு.சோ.குணாகரனின் ஒழுங்கமைப்பில் திரு.க.சிவகணேசனின் மத்தியஸ்தம் செய்ய நடைபெற்ற அந்த அறிவுப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்த்துக்கலூரி மாணவர்கள் வெற்றிபெற்றார்கள். போட்டியில் பங்குபற்றிய மாணவர்களிக்கு பணப்பரிசில்லகளை விழாத்தலைவர் வழங்கி கௌரவித்தார்

தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் படைப்பான “பாரதத்தில் கர்ணன்” நாடகம் மேடையேறியது. இந்துக்கலூரியின் கலையாசிரியர்களின் அருமையான படைப்பு என்றால் அது மிகையாகாத வண்ணம் அந்த நாடகம் அனைவரது மனதையும் தொட்டிருந்தது. மேற்படி நாடகம் தமிழ்த்தினப் போட்டிகளில் கோட்டமட்டம் மற்றும் வலயமட்டங்களில் முதலிடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடப்பட வேண்டியது. ஆசிரியர் திரு.விமலநாதன் அவர்களின் அருமையான குரல் வளத்தினால் கர்ணனின் முடிவு பார்த்துக்கொண்டிருந்த அனைவரினதும் கண்களில் கண்ணீர் மல்க வைத்தது மட்டுமன்றி அந்த காவியத்தலைவனை நினைவு கூரவும் ஒரு சந்தர்ப்பமாக அமைத்தது. அருமையான அந்த கலை படைப்பை நெறியாள்கை செய்த ஆசிரியர்களை இவ்விடத்திலே பாராட்டுக்களை தெரிவித்தாக வேண்டும். மேலும் அவர்களின் இத்தகைய சேவைகள் தொடர்ந்தும் எமது கல்லூரி அன்னைக்கு கிடைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தொடர்ந்து மதிய போசனத்திற்காய் விழா இடைந்றுத்தப்பட்டது.
கல்லூரியின் போசன மண்டபத்திலே இலக்கிய பசி தீர்த்து வந்திருந்த விருந்தினர்களின் வயிற்றுப்பசியும் சிறப்பாக தீர்த்துவைக்கப்பட்டது. கல்லூரி ஆசிரிய்ர்கள் மற்றும் சேவைக்கழக மாணவர்கள் உற்சாகத்துடனும் இன்முகத்துடனும் உரிமையோடு ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வோடு உணவு பரிமாறியதை அங்கிருந்த அனைவரும் அனுபவித்திருந்தனர்.

சுவையான மதிய உண்வினைத்தொடர்ந்து கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதியின் 2ம் மாடியிலே அமையப்பெற்றிருந்த கணனிக் கூடத்தினை வழாத்தலைவர் திரு.செ.இராகவன் அவர்கள் திரந்து வைத்தார். கொழும்புப் பழையாமாணவர் சங்கத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட 22 நவீன கணணிகள் கொண்ட அந்த கணனிக்கூடம் அழகான முறையில் வடிவமைக்கப்பெற்றிருந்த்து.

தொடர்ந்து கல்லூரியின் பாண்ட் வாத்திய குழுவினர் மாலைநேர விருந்தினர்களை அழைத்துவர குமாரசுவாமி மண்டப முன்றலில் கல்லூரி சாரணர் படைப்பிரிவு மற்றும் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் மண்டபத்தை வந்தடைந்தனர்.


தொடர்ந்து மாலை நேர பிரதம அதிதியாக கலந்து கொண்ட திருவாளர்.இராசநாயகம் அவர்களின் உரையுடன் மாலைநேர நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இலக்கணச்சுருக்கமாக நூற்றாண்டு காணும் கல்லூரியின் குழந்தைக்கு வாழ்த்து சொல்லி நிறைவு செய்தார்.


தொடர்ந்து நூற்றாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் சகோதரனை வாழ்த்துவதற்காய் வந்திருந்த லண்டன் பழையமாணவர் சங்கத்தின் தலைவர் திரு செவ்வேள் அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்து அன்னையின் மைந்தர்கள் வெவ்வேறு பின்ணணிகளில் இருந்தாலும் அவையனைத்தையும் களைந்துவிட்டு அன்னையின் குழந்தைகளாய் ஒன்று திரண்டு அன்னைக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.


அதனை தொடர்ந்து கல்லூரி அதிபர் கல்லூரி சார்பான தேவைகளை முன்வைப்பதற்காக ஒரு சிறு வேண்டுதல் உரையினை நிகழ்த்தினார். அவர் கல்லூரியின் தற்போதைய தேவைகளை முன்வைத்து  தனது உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து ஜேர்மன் நாட்டின் பழைய மாணவர் சங்க தலைவர் திரு.R.C.இராமநாதன் அவர்களும் அவரை தொடர்ந்து லண்டன் பழையமாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.கேதீஸ்வரன் அவர்களும் தமது சகோதர சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்து உரை நிகழ்த்தினர்.

தொடர்ந்து நிதிய அங்குரார்ப்பன நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதலாவதாக: அமரர்.செ.குணரட்ணம் அவர்களின் நினைவுரையினை திரு.கு.அமரேஷ் அவர்கள் நிகழ்த்த ஞாபகார்த்த நிதியம் அமரர்.குணரட்ணம் அவர்களின் பாரியாரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக: அமரர்.கலாநிதி.சோமசுந்தரம் அவர்களின் நினைவுரையினை வைத்தியர் திரு.சிவபாதசுந்தரம் அவர்கள் நிகழ்த்த திரு.செ.இராகவன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அங்குரார்ப்பண நிகழ்வின் மூன்றாவது கட்டமாக: அமரர் பேராசிரியர் இரவீந்திரநாத் அவர்களின் நினைவுரையினை திரு.ப.பரமேஸ்வரன் நிகழ்த்த திரு.செ.இராகவன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக்கலூரி பழையமாணவர் சங்கம் கொழும்புக்கிளையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவரிடையே நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் செல்வன்.ஆ.ஹரிஷங்கர் தனது பேச்சினை வழங்கினார்.

அதனை தொடர்ந்து நூற்றாண்டினை முன்னிட்டு கல்லூரி மாணவர் மட்ட்த்திலே நடாத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசளிக்கும் வைபவம் இடம்பெற்றது. கலூரியின் உப அதிபர் திரு.பொ.ஞானதேசிகனின் ஒமுங்கமைப்பில்பரிசளிப்பு நிகழ்வு நடந்து நிறைவேறியது.

தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் மற்றொரு சிறப்புப் படைப்பான “ஈழவன் குறவஞ்சி” நாட்டார் நடனம் மேடையேறியது. யாழ்ப்பானம் இந்துக்கல்லூரியிலும் மாணவியர் கல்வி கற்கின்றனரா என வியப்பூட்டும் வகையில் பெண் கலைஞர்களாக வேடம் சூடப்பட்ட மாணவர்கலள் மிகவும் அற்புதமாக நடனம் ஆடியது அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆசிரியர்கள் திரு.விமலநாதன், திரு.சிவதாஸன்,ஆகியோரின் நெறியாள்கையாலும் மற்றும் குரல் வண்ணத்தினாலும் சிறப்பு பொலிவு பெற்றிருந்தது என்றால் மிகையாகாது.

தொடர்ந்து பேச்சு போட்டியில் மேற்பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன்.மே.உமாகரனின் பேச்சு இடம்பெற்றது. .கல்லூரி மாணவனாக இருந்து தனது மூத்தோரின் கல்லுரி மீதான சேவைகளையும் கல்லூரியின் வரலாற்றையும் தொகுத்து மிக அருமையான ஒரு உணர்வுபூர்வமான பேச்சினை நிகழ்த்தியிருந்தார்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் புகழ்பூத்த மைந்தர்கள் பங்குபற்றிய விவாதம் ஆரம்பமாகியது. ”இலங்கையின் இன்றைய பாடசாலைக்கல்விமுறை இன்றைய இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது” என்ற தலைப்பிலே இந்துவின் மைந்தன் பேராசிரியர்.சிவத்தம்பி அவர்கள் நடுவராக இருக்க, இந்துவின் மைந்தர்களான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திரு.கு.குருபரன் தலைமையின் கீழே தகவல் தொழில்நுட்ப 3ம் வருட மாணவன் திரு.ஜனகன் மற்றும் வட மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி பயிற்சி பெற்றுவரும் கல்லூரி விவாத அணியின் தலவர் செல்வன்.உமாகரன் ஆகியோர் தலைப்பை ஒத்துப்பேச, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இரசாயணவியல் திறையை சேர்ந்த திரு.இ.சர்வேஸ்வரா தலைமையின் கீழே யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை வைத்தியர் திரு.பா.பாலகோபி மற்றும் திரு.கு.அமரேஷ் ஆகியோர் தலைப்பை மறுத்தும் விவாதித்தனர்.


பல ஆக்கபூர்வமான கருத்துக்கள் வெளிவந்ததோடு நகைச்சுவையாகவும் காரசாரமாகவும் நடந்த விவாத அரங்கிலே ”இலங்கையின் இன்றைய பாடசாலை கல்விமுறை இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதல்ல” எண்று வாதிட்ட திரு.சர்வேஸ்வரா தலைமையிலான அணியே வெற்றி பெற்றதாக நடுவர் அறிவிக்க கரகோசத்துடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.


தொடர்ந்து கல்லூரி பழையமாணவர்களுடன் இணைந்து யாழ்குடாநாட்டின் பிரபல கலைஞர்கள் பங்குபற்றிய இசை நிகழ்வு இடம்பெற்றது. கல்லூரி அன்னை மீது பாடப்பெற்றிருந்த பல இனிமையான மெருதுவான பாடல்களுடன் ஆரம்பமான அந்த இசை நிகழ்வு இறுதியில் விறுவிறுப்பான  பாடல்களுடன் நிறைவுக்கு வந்தது. கல்லூரி பழையமாணவர்களான திரு.க.தர்ஷனன், திரு.க.கவாஸ்கர், திரு.ஜெ.ஜெயடினேஸ் ஆகியோரின் இனிமையான் குரல் சுவையான ஒரு நிறைவை ஏற்படுத்தியது.

இறுதியாக திரு.கு.அமரேஷின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே முடிவை தொட்டது. நன்றியுரையிலே நிகழ்வில் சிறப்பு நிகழ்ச்சிகளாக மனதில் இடம்பிடித்த “பாரத்த்தில் கர்ண்ண்” மற்றும் “ஈழவன் குறவஞ்சி” நிகழ்ச்சி கலைஞர்களின் படைப்பு பாராட்டப்பட்டதுடன் அவர்களின் கலை சேவை கல்லூரிக்கு தொடர்ந்தும் தேவை என்பதும் குறிப்பிடபிட்டு காட்டப்பட்டது.

இறுதியாக கல்லூரி கீதத்துடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கொழும்புக்கிழையின் நூற்றாண்டு விழா சிறப்பாக விமரிசையாக நடந்து முடிவுக்கு வந்த்து.

“எவ்விடமேகினும் எத்துயர் நேரினும் எம்மண்னை நின்நலம் மறவோம்”.





No comments:

Post a Comment