ஓய்ந்துபோன போரினை
தொடர்ந்து இலங்கையின் எல்லா மூலைகளிலும் இளம் சமுதாயம் முன்னேற்றத்தை நோக்கிய உழைப்பை
முடக்கிவிட்டுள்ளது. விளையாட்டுத்துறை ஓரளவு துரித கதியில் முன்னேற்றப்படுவதாகவே புலப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வடபகுதி விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவது மிகவும்
வரவேற்கத்தக்க ஒரு விடயமே.
கடந்த பல வருடங்களாக 3 வேளை உணவை பெறுவதில் ஏற்பட்ட சங்கடத்தில் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்ட முடியாமலிருந்த ஒரு தலமுறை, இன்று தனது அடுத்த தலைமுறைக்கு அந்த இடைவெளி அமைந்துவிடக்கூடாது என்பதில் ஆணித்தரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
மறுபக்கம், போரின்
வடுக்களை இளைஞர்கள் நினைந்துகொண்டு இருக்கக்கூடாது என்பதையும், இனியும் பிரிவினைகளை
காரணம் காட்டி போரின் ”கச-முசாக்காளை” கிளறி, ”பரிசுகேடான” நிலைகளை உருவாக்கக்கூடாது
என்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டு பல தரப்பினரும் வடக்கில் “கிரிக்கட்” வளர்க்க அரும்பாடுபடுவது
நகைப்புக்குரியதாக இருந்தாலும், அதுதான் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் நாமும்
இணைந்துசெல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.
அந்தவகையில் அன்மையில்
வடக்கில் அதிகரித்துவரும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டிகள் பல விடயங்களை வெளிப்படுத்தி
நிற்கின்றன. இந்த சுற்றுப்போட்டிகள் எம்மத்தியில் இருக்கும் விளையாட்டின் மீதான ஆர்வத்தினுடைய
ஒரு வெளிப்பாடாக இருந்தாலும், அவை சரியான முறையில் நெறிமுறைப்படுத்தவில்லை என்பதை செவ்வனே
வெளிக்காட்டி நிற்கின்றது.
உதாரணமாக சில தரவுகளை
எடுத்து நோக்கின்:
- · நடைபெறும் சுற்றுப்போட்டிகளில் அனேகமானவை இருபது-20 சுற்றுப்போட்டிகளாகவே இருக்கின்றது.
- · எந்த அணியிலுமே தொடர்ச்சியான பெறுபேறுகள் இல்லை.
- · ஒருசில அணிகள் தோன்றுவதும் மறைவதுமாகவே இருக்கின்றன.
மேற்படி விடயங்கள்
துடுப்பாட்டத்தின் மீதான அதீத ஆர்வம் இருந்த போதிலும், அதற்கான முக்கியத்துவம் மிகக்குறைந்த
மட்டத்திலேயே வழங்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. துடுப்பாட்டத்திறனை அதிகரித்து,
சர்வதேச தரம் வாய்ந்த வீரர் ஒருவரை தயார் செய்ய இருபது-20 போட்டிகள் மாத்திரம் போதுமானதல்ல
என்பதை எவரும் இங்கு சிந்திப்பதில்லை. அதையும் தாண்டி, ஒருநாள் போட்டிகளில் விளையாட
பெரும்பாலான கழக வீரர்கள் தயார் நிலையிலும் இல்லை.
ஒட்டுமொத்த வடபகுதி இளைஞர்களிடம் ஒருநாள் போட்டிகளை விளையாடுவதற்கான உடற்தகுதி கானப்படுவதில்லை என்பது
மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம். வெறும் தெருக்கடை உணவுப்பழக்கவழக்கங்களும், புகைபிடித்தல்,
மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களும், சரியான பயிற்சிகள் மற்றும் பயிற்றுவிப்பாளரின்
ஆதிக்கம் என்பன இல்லாததுமே இவர்களின் உடல் தகுதி இன்மைக்கான காரணமாக இருக்கமுடியும்.
இலங்கையில் நடந்துமுடிந்த SLPLஇல் வடக்கில் இருந்து ஒரு வீரராவது விளையாட
அனுமதிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு (ஆரம்ப காலகட்டங்களில்) கிடைத்த பதில் “No
one has the physical fitness”. இது விளையாட்டு ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டிய ஒரு விடயமாகவே
இருக்கின்றது.
ஆக தற்போது பாடசாலை
மட்டம் மாத்திரமே அந்த தகுதியை (ஒருநாள் போட்டியை விளையாடக்கூடிய உடல் தகுதியை) இழக்காமல் இன்னமும் தக்க வைத்திருக்கின்றது.
தொடர்ச்சியான பெறுபேறுகளை
எந்த ஒரு கழகத்தினாலும் வழங்க முடிவதில்லை. கழக மட்டத்தில் வடபகுதியில் இயங்கும் எந்த
விளையாட்டு கழகத்திற்குமே பயிற்றுவிப்பாளர்கள் இல்லை. எந்த கழகமுமே தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்ட வண்ணம் இல்லை.
விளையாட்டின் மீதுள்ள
ஆர்வத்தினால் ஒரு 8 பேர் சேர்ந்ததும், உடனடியாக ஒரு விளையாட்டு கழகத்தை அமைத்து, ஒரு
அணியினை தயார் செய்து ஒன்று அல்லது இரண்டு சுற்றுப்போட்டிகளில் விளையாடுவதும், முடிந்தால்
அதில் ஓரளவு சோபிப்பதற்காக பிற கழகங்களில் உள்ள தமது நண்பர்களை இடையறுத்து அவர்களை
தமது அணிக்காக விளையாட செய்வதும் ஒரு வழக்கமாகி விட்டது.
இந்த நிலையில் போட்டிகளை விளையாடுகிற
பொழுது வீரர்கள் மோதிக்கொள்வதும், அவற்றை ஆரோக்கியமாக எதிர்கொள்ளாமல் தனித்தனியே பிரிந்து
வேறு கழகங்களை அமைப்பதும் என எண்ணற்ற கழகங்கள் அமைக்கப்படுவதும், பின்னர் சுவடுகள் இன்றி மறைந்து
போவதுமாக இருக்கின்றது. இந்த விடயத்தில் பெரியவர்கள் முதற்கொண்டு சிறியவர்கள் வரை தவறிழைத்த
வண்ணமே இருக்கின்றார்கள்.
போட்டித்தொடர்களை
ஏட்டிக்குப்போட்டி நடாத்தி மாதா மாதம் ஏதோ ஒரு வெற்றிக்கிண்ணம் ஏதோ ஒரு அணிக்கு வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் நிரந்தரமாக போட்டிகளை விளையாடும் அணிகளாக குறைந்தது 10 அணிகளாவது இருக்கின்றதா
என்பது மில்லியன் டொலர் கேள்வியாகவே இருக்கின்றது.
பொதுவாக ஒவ்வொரு சுற்றுப்போட்டியும்
எதோ ஒரு விளையாட்டு கழகத்தின் பின்னணியில் தான் நடாத்தப்படுகிறது. அவற்றை நடாத்தும்
கழகங்கள் தமக்கு ஒரு பயிற்றுவிப்பாளைர நியமித்து ஏதாவது ஒரு பொட்டியை இலக்குவைத்து
செயற்படும் வழக்கம் எப்போதுமே இருந்ததில்லை. இந்த சுற்றுப்போட்டியில் வெளியேறினால்
தான் அடுத்த சுற்றுப்போட்டியில் விளையாட முடியும் என்கிற நிலையில் எமது போட்டி ஏற்பாடுகளும்
இருக்கின்றன.
பெரும்பாலும் கழகங்கள்
ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பாடசாலையை அடிப்படையாக வைத்தே அமைக்கப்பெற்றிருக்கும். பல சமயங்களில்
ஆள் பற்றாக்குறை காரணமாக பாடசாலை வீரர்கள் கழக அணியுடன் இணைக்கப்பட்டுவர். இது ஒரு
பதின் வயது மாணவன் 19 வயதுமட்டுமாவது சரியாக வளர்த்தெடுக்கப்படும் வாய்ப்பையும் பறித்தெறிகிறது.
கழக அமைப்பில் அவர்கள் விளையாட ஆரம்பிக்கின்றனர் ஆ விளையாட்டு பாணியில் மாத்திரம் இல்லாது
பல பழக்கவழக்கங்கள் அடிப்படையிலும் அவர்கள் சீரழிக்கப்படுகின்றனர்.
குறுப்பாக நடுவரை
கெட்டவார்த்தைகளால் ஏசுதல் தொடங்கி, பயிற்றுவிப்பாளர் இல்லாத போட்டி முறை. சுயம்புலிங்கமாக
விளையாடுதல் முதல் கொண்டு இருபது-20 போட்டி முறையில் விளையாடுதல் வரை அனைத்து விடயங்களிலும்
பாடசாலை மாணவர்கள் சீர்குலைக்கப்படுகின்ரனர்.
இதற்கான சிறந்த
உதாரணம் அன்மையில் ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரிகளுக்கிடையிலான
V.T.S. சிவஞானம் ஞாபகார்த்த போட்டியை எடுத்துக்கொள்ளலாம். முதல் தர அணியான ஆனந்த கல்லூரி
அணியை எதிர்கொண்டது யாழ் இந்து. முதல் தடவையாக TURFஇல் விளையாடும் வாய்ப்பை பெற்ற யாழ்
இந்து அணியினருக்கு போட்டிக்கு முன்னதாக இரண்டு நாட்கள் தலா 4 மணித்தியாலங்கள் பயிற்சிக்காக
அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நம்மவர்கள் பயிற்சியை என்னால் பார்க்க முடிந்தது. வருகை
தந்திருந்த 15 பேரும் நேரங்களை பகிர வேண்டிய நிலை இருந்தது. ஒருவர் தலா 5 ஓவர்கள் வரை
மாத்திரமே பயிற்சி எடுத்திருக்க முடியும். அந்த நிலையில் கூட அவர்கள் தங்களால் 6 அடிக்க
முடியுமா என்பதையே முயற்சி செய்துகொண்டிருந்தனர். எவருமே defend, drive, pull shot
இவற்றை செவ்வையாக செய்ய முடிகிறதா என பரீட்சித்து பார்க்க முன்வரவில்லை. அப்படி பயிற்சி
செய்த ஓரிருவர் போட்டியிலும் ஓரளவு சோபித்திருந்தனர்.
2 நாள் போட்டி
ஆரம்பித்தது. முதல்தர அணிக்கு எதிராக துடுப்பெடுத்தாட இறங்கிய யாழ் இந்து 6, 4, 3, 2 என அதிரடியாக ஓட்டங்களை குவித்தது. 3 ஓவர்களில் 34 ஓட்டங்களை பெற்று முதலாவது
இலக்கினை இழந்தது. அந்த முதலாவது இலக்கு மிக முக்கிய வீரராக இருந்த
போதும், அவர்களுக்கு அது பெரிய இழப்பு என்பதே தெரியவில்லை. ஏனெனில் அவர்களைப்பொறுத்தவரை 3 பந்துப்பரிமாற்றத்தில் 33 ஓட்டங்களை பெற்றது பெரிதாக இருந்தது. தொடர்ந்து அவ்வாறே இலக்குகளை இழந்து 102 ஓட்டங்களிற்கு ஆட்டம் முடிவடைந்தது. ஆனால் இவர்களின் ஓட்ட இலக்கினை விரட்டி அடித்த ஆனந்த
கல்லூரி அதே 33 ஓட்டங்களை பெற 13 பந்துப்பரிமாற்றங்களை உபயோகித்தது. இறுதியாக முதல் இன்னிங்ஸ் முடிவில் 20 ஓட்டங்கள் முன்னணியில்
இருக்க, போட்டி நேரம் நிறைவடைய இன்னமும் இரண்டரை மணித்துளிகள் இருக்கும் நிலையில்,
33 33பந்துப்பரிமாற்றங்களே வீசப்பட வேண்டிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸுக்காக யாழ் இந்து
கழமிறங்கியது. வெறும் 10 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது யாழ் இந்து. எந்த
இலக்கும் திறமையான பந்துவீச்சால் வீழ்த்தப்படவில்லை என்பது பார்வையாளர்களுக்கு தெரியும்.
இது அனைத்தும்
இருபது-20 போட்டியின் செல்வாக்கு என்பதில் ஐயமேதுமில்லை. அதுமட்டுமன்றி தான்தோன்றித்தனமான
விளையாட்டு, போட்டிகளுக்கு முந்திய பயிற்சிகளில் எவ்வாறு பயிற்சி செய்வது என்பது பற்றிய
எந்த அறிவுரையும் இல்லாதது போன்ற அடிப்படை பிரச்சனைகள் நிறையவே இருந்தது. இது பொதுவாக
எல்லா வடபகுதி கல்லூரிகளுக்கும் பொருத்தமானதாகவே இருக்கும். இவை கழக மட்டத்திலிருந்து
பாடசாலை மட்டத்திற்கும் கடத்தப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வேயாகும்.
இவை எல்லாவற்றையும்
விட வடபகுதியில் தகுதி வாய்ந்த பயிற்றுவிப்பாளர்கள் இல்லை என்றே சொல்லலாம். சுழல்பந்துவீச்சின்
வகைகளை சரியாக கூற முடியாத நிலையிலும், swing bowling என்றால் என்ன என்பதை தவறாக விளங்கியிருக்கும்
பயிற்றுவிப்பாளரும் கடமையில் இருப்பதை நானே நேரடியாக அவதானித்திருக்கிறேன்.
நான் அறிந்தவரை
பயிற்றுவிப்பாளர் தரம்-1 மற்றும் தரம்-2 என ஒரு தகுதிகாண் நிலைகள் இருப்பதாகவும், அவை
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை பயிற்சிக்கூறுகள் நடாத்தி சான்றிதழ் வழங்குமெனவும்
அறிந்துகொண்டேன். அந்த தரம்-1 தகுதி பெற்றவர்களே இங்கு விரல் வீட்டு எண்ணக்கூடி அள்வினரே
இருக்கின்றனர். மாணவர்களுக்கு cricketing skills போதிய அளவு இருக்கிறது என்பது எனது
கருத்து. ஆனால endurance, team work, game plan, pressure handling, sportsmanship
போன்ற விடயங்கள் அறவே இல்லை. இவற்றை சுயம்புலிங்கமாக
தனிநபர் ஒருவர் ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்பது பட்டவர்த்தனமான உன்மை. ஆனால் இதுபோன்றவற்றிற்கு
பயிற்சி வழங்குமளவிற்கு நம்மிடம் பயிற்றுவிப்பாளர்கள் இல்லை. எனவே வெளிமாவட்டங்களிலிருந்து
எமக்கான பயிற்றுவிப்பாளர்களை தருவித்து எமது அணிகளை தரமுயர்த்தினாலேயன்றி எமது துடுப்பாட்டத்தின்
தராதரத்தினை எம்மால் நிச்சயமாக முன்னேற்ற முடியாது.
வெறும் சுற்றுப்போட்டிகள்
எமக்கு எதையும் தந்துவிடப்போவதில்லை. மேலும் கழகங்களில்
பாடசாலை மாணவர்கள் இனைந்து விளையாடுவது தவிர்க்கப்பட வேண்டும். வேண்டுமானால் பாடசாலை
அணிகள் கழகங்களுடன் மோதட்டும்.
உடல் தகுதி என்பது இன்றைய மாணவ நிலை வீரர்களுக்கு யாழில் இல்லையென்றே கூறிவிடலாம்.முன்னமெல்லாம் 1st லெவின் விளையாடும் அணியை பார்த்தால் பெரும்பாலானவர்களுடன் கதைக்கவே பயமாக இருக்கும்.அப்படி உடல்வாகு வைத்திருப்பார்கள்.அது தான் அவர்களின் வேகம்,ஆக்ரோசமான பந்துவீச்சுக்கும் அதிரடியான,நீண்ட நேர துடுப்பெடுத்தாட்டத்துக்கும் உதவியிருந்தது.இன்றைய 1st லெவின் வீரர்களை பார்க்கையில் ஏழாம் எட்டாம் ஆண்டு வீரர்களை போல தான் வளர்ச்சியிலும் உடல்வாகிலும் காணப்படுகின்றனர்.எம்மவர்கள் கொழும்பு அணியுடன் விளையாடுவதை பார்த்தால் எதோ un19 க்கும் un15 க்கும் போட்டி நடைபெறுகின்ற மாதிரி தான் தென்படும்.
ReplyDeleteGood one boss.
ReplyDeleteதெளிவான பார்வை.
திறமைகள் வீணாக்கப்படுவது வருத்தத்திற்குரியது.
ம்ஹ்...! காலத்துக்கு தேவையான பதிவு!
ReplyDeleteஇப்போது தானே விளையாடவே ஆரம்பித்திருகிறார்கள்.
முட்டி மோதி, ஒரு வழியாக பக்குவப்படுவார்கள்.