எழுதுவது என்பது
எனது மனநிலையை பெறுத்த வரையில் விருப்பத்திற்கும் விருப்பத்திற்கும் இடையில் நடைபெறும்
ஒரு சிறிய பாரத யுத்தம் தான். இந்தத்தடவை பல சங்கதிகளை விளக்கிக்கூறவேண்டும் என்ற ஆதங்கத்தில்
எழுத ஆரம்பிக்கிறேன். அந்த வகையில் முதலில் என் மனநிலையில் நடக்கும் விருப்பத்திற்கும்
விருப்பத்திற்கும் இடையிலான போரைப்பற்றி விளக்கிக்கூறுகிறேன்.
எழுத வேண்டும். அதிலும்
குறிப்பாக எனது சொந்த சிந்தனைகளை எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். ஆயினும் இப்போது
எழுதுவதற்காக என் நேரத்தை செலவழிப்பதா இல்லை குப்புற படுத்து ”கும்” என்று குறட்டை
விடுவதா என்னும் நிலையிலே, எனது விருப்பம் எப்போதுமே தயவு தாட்சணியம் இன்றி ”கும்மென்ற”
குறட்டையை தான் விரும்புகிறது. அதில் எனக்கே சுவாரசியமான விடயம் என்னவெனில் “மழைக்குள்ள
போத்திட்டு படுத்தா எப்பிடி இருக்கும்” என்றும் “வெயில் வெக்கைக்க குளிச்சிட்டு படுத்தா
எப்பிடி இருக்கும்” என்று வருடத்தின் வெவ்வேறு காலங்களிலும், எனது வெவ்வேறு நிலமைகளிலும்
வெவ்வேறு காரணங்களுடன் ஒரே விருப்பத்தெரிவு இடம்பெறுவது எனக்கே கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.
இன்னும் கொஞ்சம்
சுவாரசியமான விடயம் பரீட்சை காலங்களில் உருவாகும் சிந்தனைகள்.
·
பரீட்சைக்கு
3 மாதங்களிற்கு முன்னர்: ”இப்பதான் ஸ்ராட் ஆயிருக்கு இப்பவே ஆர்வக்கோளாறோட படிச்சா
பேந்து கடைசி நேரத்தில களைச்சு போவன்..ஸோ ஆறுதலா 1 மாசம் கழிச்சு தொடங்குவம்”
·
பரீட்சைக்கு 2 மாதங்களிற்கு முன்னர்: “ரெண்டு மாசத்துக்கு
முன்னுக்கு படிச்சா 1 மாசத்துக்கு முன்னுக்கு மறந்திடும். சோ 1 மாசத்துக்கு முன்னுக்கு
தான் படிக்கணும்”.
·
பரீட்சைக்கு
1 மாதத்திற்கு முன்னர்: “இப்ப மினக்கட்டு பாடமாக்கிறத விட சோதினைக்கு முதல் கிழமை படிச்சா
ரெனசன்ல சிம்பிளா பாடம் வந்திடும்”.
·
பரீட்சைக்கு
1 வாரத்திற்கு முன்னர்; “இப்ப அவ்வளவா ரென்சன் இல்லை.முதல் நாள் படிச்சாலே காணும்”.
·
பரீட்சைக்கு
முதல் நாள்: தொலை பேசியில “டேய் மச்சி எத்தின சப்டர் அடா சோதினைக்கு?14 ஆன்..எல்லாம்
போச்சு போ.நான் இனித்தாண்டா படிக்கனும்..எங்க..எவ்வளத்த பண்ணிட்டம் இத மட்டும் பண்ணமாட்டமா
என்ன”.
·
பரீட்சை
முதல் நாள் இரவு: “ஒரே ரென்சனா இருக்கு..கூலா நல்ல ஸ்லீப்(sleep) ஒண்டு போட்டா விடிய
எல்லம் ஓகேயாகீடும்.அப்பதான் சோதின வடிவா செய்யயாம்”.
·
பரீட்சை
நாள் காலை: “ஒண்டுமே தெரியாது.என்னத்த எழுதிறது. எவனாச்சும் 2 மணித்தியாலத்தில பேப்பர
குடுத்தாத்தானே நான் எழும்பி வெளில வராலாம்..ஆனாலும் எப்பிடி 2 மணித்தியாலம் இருக்கிறது”.
·
பரீட்சை
நேரம்: “உந்த சோதினைக்க்கு போய் பெயில் விடுறத விட போகாம விடலாம்.அற நனைஞ்சவனுகு கூதல்
என்ன குளிரென்ன”.
இப்பிடி எனது மனதில
எழும் போராட்டங்கள் என்று தெளிவா நான் வரையறை செய்தால் சுவாரசியமாக தான் இருக்கும்.
ஆனால் இதை ஒரு வார்த்தையில எளிமை சொட்ட சொன்னால் ‘மனக்கட்டுப்பாடு( SELF CONTROLE)
இல்லை’ என்பது தான் உன்மை.
இதே போலதான் இன்று
நமது சமுகத்தில் (என் அவதானிப்பில் தமிழ் சமுகத்தில் மட்டும் தான். எனக்கு தெரிந்தது
குறிகிய சமுக வட்டங்களே) ஒரு மிகப்பெரிய தவறு (தவறு என்ற போர்வையில் சமுகத்தால் பார்க்கப்படுகிறது)
ஒன்று பல விளக்க விமர்சனங்களுடன் தொடர்கிறது.
அது தான் கூடப்பிறக்காத
(இரத்த உறவு அற்ற) அக்கா-தம்பி மற்றும் நட்பு உறவு. இது பற்றி நிச்சயம் நான் விமர்சித்தே
ஆகவேண்டிய கடமைப்பாட்டை உணர்கிறேன்.
முதலில் உறவுகள்
அடிப்படையில் அவற்றின் தன்மைகளை பற்றி நோக்க வேண்டிய தேவை உள்ளது. தாய்-பிள்ளை, கணவன்-மனைவி,
அம்மா-அப்பா, அக்கா-தங்கை, அக்கா-தம்பி, அண்ணா-தங்கை தவிர நண்பர், சகபாடிகள், தோழியர்,
சக-ஊழியர், சுற்றத்தார் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இன்று இதில் பல உறவுகள்
உச்சரிக்கப்படாத உறவு முறையாக அல்லது அழிந்து போகக்கூடிய உறவு முறைகளாக மாறியிருப்பதும்
ஏனோ உன்மை தான். சகபாடி, சக-ஊழியர் போன்ற உறவு முறைகளெல்லாம் நண்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்டு
நட்பினுடைய தனித்துவத்தையும் அவ்வவ் உறவுகளின் தனித்துவத்தையும் சீர் குலைத்து விட
செய்கின்றன. இதில் குறிப்பாக உறவுகளில் எதிர்ப்பால் பங்கெடுக்கின்ற போது மேலும் சீர்குலைவுகள்
உக்கிரமடைகின்றன.
இன்று புது அறிமுகமாக
உள்ள உறவு, நண்பர் என்பதையும் தாண்டி அக்கா-தம்பி, அண்ணா-தங்கை உறவுகள் எந்த அடிப்படை
பிடிமானமும் இன்றி உருவாக்கப்படுவதுதான். எனது இந்த பதிவின் நோக்கமும் மேற்படி அக்கா-தம்பி
மற்றும் அண்ணா-தங்கை உறவுகளின் பின்னணியை ஆராய்வது தான். அந்த வகையில் அக்கா-தம்பி
அல்லது அண்ணா-தங்கை உறவு என்பது பற்றிய தெளிவு அவசியம். ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களும்
ஒரு தந்தைக்கு பிறந்தவர்களும் சகோதரர் என்ற உறவின் மூலம் பிணைக்கப்படுகின்றனர். இந்த
சகோதரர்களில் வயதில் மூத்த ஆண்களை அண்ணா என வயதில் குரைந்தவர்கள்(தம்பியர், தங்கையர்)
அழைப்பர்(அல்லது உறவு முறை பொருள்படும்).இதேபோல வயதில் மூத்த பெண் அக்கா எனவும் அழைக்கப்படுவார்.
இதில் சகோதரர்களை
மட்டும் தானா அக்கா அண்ணா என வயது அடிப்படை பாகுபாடு செய்ய முடியும்? என்ற வினா தொக்கி
நிற்கிறது. இல்லை. வயதில் மூத்தவர்கள் பருவம் மற்றும் பால் அடிப்படையில் அண்ணா, அக்கா
ஐயா, அம்மா, தாத்தா, பாட்டி (இன்று ஆன்டி, அங்கிள், சேர், மேடம்) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
ஆனால் அவை (வயது/ மூப்பு) விழிப்பு விகுதிகளே அன்றி உறவுமுறை பெயர்களாக இல்லை.
”எனக்கு அக்கா”
என்பதில் வெளிப்படும் பொருளும் ”என்ர அக்கா” என்பதில் வெளிப்படும் பொருளும் வேறு. எனக்கு
அக்கா என்பதில் என்னை விட வயதில் மூத்தவர் என்பது பொருள். என்னுடைய அக்கா என்பது எனது
மூத்த சகோதரி. இந்த அடிப்படை தமிழ் பொருள் தெளிவின்மையில் ஆரம்பித்த உறவுகள், இன்று
பல பொருள்களில் பலரால் உபயோகிக்கப்பட்டு புனிதமிழந்து வருகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
பொதுவாக கல்வி
கற்கும் இடத்திலோ, வசிக்கும் தெரு/வீட்டுத்தொகுதியிலோ, தொழில் செய்யும் இடங்களிலோ அல்லது
பிரயாணங்களிலோ ஏற்படுகின்ற எதிர்ப்பால் சந்திப்புகள், உறவுகள் ஆகின்றன. ஆனால் அவ்வுறவுகள்
தமக்குரிய அடையாளத்தினை பெற்றுக்கொள்வதில் சிக்கலடைகின்றன. உடனடியாக நட்பு என்ற பெயரில்
ஆரம்பிக்கின்றது. பின்னர் தாவி தாவி காதல், கள்ளக்காதல், குடும்பம், அக்கா-தம்பி, அண்ணா-தங்கை
போன்ற ஏதாவது ஒன்றில் முடிகின்றது.
தற்போது அதிகம்
தெரிவு செய்யப்படுகின்ற எதிர்ப்பால் உறவு முறை அக்கா-தம்பி, அண்ணா-தங்கை. இந்த தெரிவுக்கான
காரணம் என்ன? அது சரியான தெரிவா என்பது பற்றிய தேடல் இனி.
உன்மையில் மேற்படி
பெயரிடல் மூலம் அவர்கள் வெளிப்படுத்த விரும்புவது என்ன?
இதில் இரண்டு விதமான
வெளிப்படுத்தல்கள் இருக்கின்றன. 1)சமூகத்துக்கான வெளிப்படுத்தல். 2)தமக்குள்ளான வெளிப்படுத்தல்கள்.
சமுகத்திற்கு நாம் சகோதரர் நமக்குள் பாலியல் உறவுகள் இருக்க முடியாது என்பது, அடுத்தது
தமக்குள்ளான வெளிப்படுத்தல் நாம் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்பது.
ஆனால் பாலியல்
என்றால் என்ன என்பதன் அடிப்படை அறிவே இல்லாத சமுதாயம் ஒன்று நாம் பாலியல் அற்ற உறவினை
வைத்திருக்கிறோம் என்று எவ்வாறு வெளிப்படுத்த முடியும்? என்பது எனது பகிரங்க கேள்வி.
அடிப்படையில் பாலியல்
என்பது பசி போன்றது. பசித்தால் சாப்பிட வேண்டும் எனத் தோன்றுகிற எமக்கு பசி என்றால்
என்ன என தெரிவதில்லை. அதுபோலவே பாலியலும். பாலியல் உணர்வு இருக்கின்ற வேளையில், எதிர்ப்பாலருடன் ஏதாவது தொடர்பில் இருப்பதற்கன தூண்டல்
ஏற்படுவதை உணர்வோமே தவிர, ஏன் அந்த தூண்டல் நிகழ்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை.
இந்த நிலையில் நமது உறவு புனிதமானது.நாம் பாலியல்பு அற்ற புனிதமான உறவில் இருக்கிறோம்
என எந்த வகையில் ஒரு எதிர்ப்பால் உறவினர் கருத்துக்கூற முடியும்?.
இந்த இடத்தில்
உன்மையாக அக்கா தம்பிக்கு இடையிலும் பாலியல் உணர்வுகள் ஓடும் என்று நான் சொல்லுவதாக
ஒரு கருத்து இழையோடலாம்..ஆனால் அது இல்லை.
எதிரில் நிற்பவர்
ஒருவரை பல வகைகளில் அடையாளம் காணலாம். அப்பா, அம்மா, அக்கா, அண்ணா, ஆண், பெண் என பலவாறு
அடையாளப்படுத்த முடியும். இந்த இடத்தில் சொந்த அக்காவை, அக்கா எனும் அடையாளப்படுத்தலே
ஆழமகப்பதியுமே தவிர அவர் பெண் எதிர்ப்பால் என்பதல்ல. ஆனால் இடயில் ஏற்படுத்தப்படும்
எந்த உறவாலும் இவ்வாறு இலகுவாக பால் அடையாளத்தை தாண்டி வேறொரு அடையாளத்தை ஏற்படுத்த
முடிவதில்லை. ஆனால் அளவுகடந்த/ அதீத மரியாதையும் சில சமயம் பால் அடையாளத்தை விஞ்சி
மனித மூளையில் பதிய வாய்ப்புள்ளது. ஆக சாதாரணமாக ஒருவரை கண்டால் பால் அடையாளம் பகுத்தறியப்படும்.
அதை மறுக்க முடியாது.
பசித்தவனுக்கு
புரியாணி மட்டும் தான் பசிதீர்க்கும் என்றில்லை. ஒரு குவளை தண்னீர் கூட பயன் படலாம்(குறுகிய
நேர தீர்வாக). அதேபோல தான் இந்த எதிர்ப்பால் உறவிலும் பாலியல் களை. எதிர்ப்பாலாரை நினைப்பதே
ஒரு வித பாலியல் ரசம் தான். பார்ப்பது. பேசுவது எல்லாமே பாலியல் ரசம் உள்ளவை தான்.
ஆனால் எல்லா தருணங்களிலும் அந்த பாலியல் ரசம் இருப்பதில்லை. உதாரனமாக நான் சாப்பிடும்போதெல்லாம்
நமக்க்கு பசியெடுத்திருப்பதில்லை என்பது போல்.
இன்று இந்த பாலியல் ரசங்கள் எல்லாம் பல கோணங்களில்
கையாளப்படுகிறது. சண்டை பிடித்தல், கெஞ்சுதல், கிள்ளுதல், நுள்ளுதல், எள்ளி நகையாடுதல்,
புகழ் பாடுதல், வஞ்சித்து பேசுதல், உணவு ஊட்டுதல், பிரயாணங்களில் துனை போதல், பாதுகாப்பு
வழங்குதல், பராமரித்தல் என்று இப்படி நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் அவர்களை பொறுத்தவரை
பாலியல் என்றால் ஆபாச வார்த்தைப்பிரயோகம், பாலியல் அங்க சேஷ்டைகள் மற்றும் முழுமையான
உடலுறவுகள் மட்டுமே. முத்தமிடுதல், கட்டித்தழுவுதல் போன்றன கூட இன்று பாலியல் செயற்பாடுகளாக
கருதப்படுவதில்லை. முத்தத்திலும் உதட்டு முத்தம் மட்டுமே தவறானது மற்றவை எல்லாம் பாலியல்
இல்லை என்ற அடிப்படியில் தான் புனிதமான உறவுகள் இன்று மேடையேறுகிரது.
பதிவு நீண்டுகொண்டே செல்வதால்…இதையும் பாகமாக
தொடர்கிறேன் எனச்சொல்லி முடிக்க நினைக்கிறேன்….ஆனால் இன்னும் நிறைய விடயங்கள் சேர்க்கப்பட
வேண்டியுள்ளது..விஜய் ரிவி நீயா நானா நிகழ்வு ஒன்றில் ஆண் பெண் நட்பை ஏற்கலாமா ஏற்கமுடியாதா
என்ற கருப்பொருளில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்வை பார்த்ததும் அதில் இறுதியாக
கோபிநாத்தினால் கூறப்பட்ட சாராம்சத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதால் பதிவின் மூலம்
எனது கருத்தை வெளிப்படுத்த நினைத்தே இந்த தலைப்பில் எழுத நினைத்தேன்..ஆனால் எதற்காக
தொடங்கினேனோ அந்த கருப்பொருளுக்கு இன்னமும் நான் வரவில்லை என்பது தான் உன்மை……….தொடரும்....................
No comments:
Post a Comment