Wednesday, October 24, 2012

”ஆணாதிக்கம்” தலைவிரித்தாடுகிறது


அன்மைய காலங்களில் சமுக வலைத்தளங்களில் நான் அதிகம் பார்த்து வெறுப்படைந்த விடயங்களில் ஒன்றுதான் இந்த “ஆணாதிக்கம்” எனப்படும் பெண்ணடிமைத்தனம் சம்பந்தமான கருத்துக்கள். என்னை மிகவும் எரிச்சலடைய வைத்த விடயம் ஒன்று என்றே இதை சொல்லலாம். பொதுவாக என்மீதான பலரது கண்ணோட்டம் “அமரேஷ்” ஒரு “தடிச்ச ஆணாதிக்கவாதி” என்பதுதான். இந்த பெயரை நான் வாங்கவதற்கு நான் செய்த ஒரே ஒரு கைங்கரியம் பொண்ணடிமைத்தனத்தை ஆணாதிக்கம் என குறிப்பிடுவதை எதிர்த்ததும், பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பதை விடுத்து அதற்கு எதிராக கூக்குரலிட்டு, பெண்ணடிமைத்தனத்திற்கு இலவசமாக விழிப்புணர்வு செய்வதை எதிர்த்ததும் தான்.


காலம் காலமாக பெண்களை அடிமைப்படுத்தி வாழ்ந்துவந்தது எமது தலைமுறை என பலராலும் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு ஆதாரமாக 7 வயது பச்சிளம் சிறுமியை திருமணம் செய்துகொண்ட பாரதி முதல்கொண்டு பலர் முட்டைக்கண்ணீர் விட்டதும் நான் அறிந்துதான் உள்ளேன். நான் பண்டைய காலத்தைப்பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் பழைய காலத்திற்கும் நிகழ்காலத்திற்கு வேறுபிரித்து வித்தியாசம் காண முடியாதவர்களின் புலம்பலைப்பற்றியே பேச விரும்புகிறேன்.

நான் பிறந்ததிலிருந்து எனக்கு பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்பதைப்பற்றியெல்லாம் நான் நான்கு மேடைகளில் பேசியதன் பின்னர்தான் தெரியவே வந்தது. அதுவரை என் குடும்ப அமைப்புமுறை எனக்கு புலப்படுத்தியதெல்லாம் பெண்ணாய்ப்பிறந்தால் தான் ”சூப்பர்” வாழ்க்கை. எல்லாரும் பெண்களைதான் “சப்போட்” பண்ணுவினம் என்பது தான். என் அக்காவை நான் அடித்து அடக்கலாம், அல்லது காரியம் சாதிக்கலாம் என்ற எண்ணம் எனக்குள் வந்ததன் பின்னர் நான் ஒருபோதும் அவளை அடித்ததில்லை. அந்த நிலை என்னிடம் வரும் முன்னர், சுமார் கால் அரை மணித்தியாலங்கள் கூட அடிபட்டிருப்பேன், அப்புறம் ”பொம்பிளை பிள்ளைக்கு கை நீட்டிப்போட்டான்” என்பதற்காக அப்பா எனக்கு சுமார் ரெண்டுமணித்தியாலம் “one side bowling” செய்வார். ஆனால், என்று என் மனதில் அக்கா எனக்கு வெறும் சகோதரம் மாத்திரமில்லை அவள் வேற்று பாலினத்தவள் என்று தெரிய வந்ததோ, என்று அவள் பிற பாலினத்தால் அடக்கப்படலாம் என்ற எண்ணம் எனக்குள் விதைக்கப்பட்டதோ அன்றிலிருந்து நான் அவளை அக்கா என்று பார்ப்பதில் சிறு மாற்றம் ஏற்பட்டது என்றுதான் நினைக்கிறேன். இது யார் போட்ட விதை? என் அக்காவும் நானும் பரஸ்பரம் அடிபட்டால் உனக்கென்ன? எதற்காக நீ என்னை ஆண் பெண் என்று பிரித்து வைத்தாய்? இந்த விதை எனக்கு சொல்லித்தந்தது என்ன? அக்கா பாவம். நான் ஆம்பிளை அவளுக்கு அடிச்சா அவளுக்கு வலிக்கும் என்பது. அவள் உடலால் பலவீனமானவள் என எனக்குள் விதையை போட்டது யார்? பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக சந்து பொந்து எல்லாம் கூக்குரலிட்டுக்கொண்டிருப்பவர்கள் தான்.

ஆக என்னை “தடிச்ச ஆணாதிக்கவாதி” என சமுகம் கருதினால் அதற்கு நான் எந்த வகையிலும் குற்றம் செய்தவன் அல்ல. என் மரபணுக்களும் அந்த குற்றத்தை சுமந்திருக்கவில்லை. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறோம் என்று கூறி பெண்ணடிமைத்தனத்திற்கு இலவசமாக விழிப்புணர்வு செய்பவர்களையே சாரும்.

அதுபோக அன்மையில் சின்மயி விவகாரம் பெரிதாக சூடு பிடித்தது. அதிலிருந்து தொடரலாம் என நினைக்கிறேன். சின்மயியுடன் தனிப்பட்ட கருத்துமோதல் கொண்ட ஒரு ஐவர் அவரை அவதூறாக கருத்து வெளியிடுவதாக ஒரு புகார். அது சின்மயிக்கும் அந்த ஐவருக்குமான தனிப்பட்ட பிரச்சனை. சின்மயி ஒரு பிரபலமாக இருந்ததால் அந்த தனிப்பட்ட பிரச்சனை செய்தியாகவும் மாறியது. ஆனால் இந்த பிரச்சனை எந்த மூலையில் வைத்து ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக்கப்பட்டது? “பெண்கள் சமூக வலைத்தளங்களில் ஆணாதிக்கப்போக்கினால் பாதிப்படைகிறார்கள்” என்ற ஒரு பொதுமைப்பாடான கருத்து ஏன் எழுப்பப்பட வேண்டும்.

சரி சின்மயி ஒரு பெண். அவரை அவதூறாக பேசியவர்கள் ஆண்கள். அதனால் இப்படி ஒரு பொதுமைப்பாடான முடிவு தேவையா? ஏன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாக்கி ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறீர்கள். நான் என் அக்காவுடன் சண்டைபோடும் போது அது எனக்கும் அக்காவுக்குமான தனிப்பட்ட சண்டை. அதற்குள் எதற்காக ஆண் பெண் என்ற சாயத்தை பூசினீர்கள். எதற்காக எங்கள் சிறுவயது செல்லச்சண்டைகளை சீரழித்தீர்கள்?

சரி ஆண்கள் சமுக வலைத்தளத்தில் அவதூறாக பேசப்படுவதில்லையா? ஆண் பாலின உறுப்புக்களை அடிப்படையாக வைத்து இன்னொரு ஆண் திட்டப்படுவதில்லையா? இவையனைத்துக்கும் விடையளிக்காமலேயே மேலோட்டமாக பொதுமைப்படுத்துகிறார்கள் இந்த சமுக சீர்கேட்டாளர்கள்.. ஒருவேளை பெண்கள் அவ்வாறு யாரையும் சமுக வலைத்தளங்களில் வைவதில்லை என்பதை பொதுமைப்பாடானா முடிவாக கொள்ளலாம். அதற்க்காக பெண்களை பாராட்டலாம். அதன் மூலம் ஆண்களும் அவ்வாறு செய்வதை வெறுக்கும் சூழ்நிலைகளை உருவாக்கலாம். இதைவிடுத்து சின்மயியின் மேல் ஏற்பட்ட கோபத்தினை ஒருவர் வெளிப்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சனையினை அவர்களது தனிப்பட்ட பிரச்சனையாக கொள்ளாமல் ஒட்டுமொத்த ஆண் சமுகத்தையும் இழுத்து வைத்து குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

எனது வாழ்க்கையில் நான் சந்தித்த ஆண்களில் ஒருவர் என் அப்பா. என்னைப்பொறுத்தவரை என் அப்பா என் அம்மாவுக்கு அடங்கித்தான் இருந்தார் என்பது எனது கணிப்பு. அப்பா மாமிசம் உண்ணும் குடும்ப வழக்கத்தில் வந்தவர். அவர் மாமிசத்தை அவ்வளவு பிரியப்பட்டு சாப்பிடுவார் என்பது அவரது சகோதரர்கள் எனக்கு சொல்லி தெரியும். ஆனால் மனைவி மற்றும் பிள்ளைகள் மாமிசத்தை வெறுத்ததற்காக தானும் அதை கைவிட்டவர். இன்றுவரை என் அம்மாவை அவர் “டி” போட்டு பேசியதும் இல்லை அவ்வாறான ஒரு சூழ்நிலையை என்னால் கற்பனைசெய்துகூட பார்க்க முடியாது. இப்படி நிறைய. (இவை சொல்லக்கூடிய உதாரணங்களில் வெகுசிலவே). ஆனால் ஒட்டுமொத்த ஆண் சமுதாயத்தை குறிப்பிடும் போது என் அப்பாவையும் தான் குறிப்பிடுகிறீர்கள்,

அதுபோக ஆணாதிக்கம் என்பது எல்லா ஆண்களிடமும் இருக்கிறது. அது ஆண்களில் மரபணுக்களில் விதைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி சொல்லி, ஆண்மை என்றால் ஆணாதிக்கம் இருக்கணும் என்ற நிலைக்கு ஆண்களை தள்ளிவிடுகிறார்கள்.

ஆண்களாக இருக்கும் நம் ஒவ்வொருவர் உடலிலும் உள்ள ஜீன்கள், பெண்களை நம்மை விடக் கீழானவர்களாகவே பார்க்க வைக்கிறது என்பது அறிவியல் உண்மை.

இது சின்மயி விவகாரத்தில் ஓரளவு நடுவுநிலைமை வகிக்கக்கூடிய ஒரு பதிவில் இடப்பட்ட கருத்து. எந்த ஆய்வுகூடத்தில் இந்த அறிவியல் உன்மை நிரூபிக்கப்பட்டது எனபது யாருக்கும் தெரியாது. அவரது மனதில் இந்த பொய் உன்மையென பதியப்பட்டு விட்டது என்பதுதான் உன்மை. ஆக மரபணுக்களை குற்றம்சாட்டி செய்வதெல்லாவற்றையும் செய்வதற்காக இந்த பெண்ணடிமைத்தனக்காரார்கள் போட்டுள்ள கவசம் என்பதை இந்த பெண் அடிமைத்தனத்திற்கு எதிரானவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.

எனக்குதெரிந்த ஒரு சமுக வலைத்தள நண்பர். அவர் பொதுவாக எல்லா விடயங்களையுமே ஆழமாகவும் நுணுக்கமாகவும் நோக்கக்கூடிய திறமை உள்ளவர். ஆனல் தொடர்ந்து அவரை அவதானித்ததில் ஆண் பெண் பிரச்சனை என்றால் அவர் பெண்கள் பக்கம் தான். அவர்தான் முதன் முதலில் நேரடியாக எனக்கு பெண்கள் மீது ஏதோ காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என கருத்து கூறியவர்.

ஒருதடவை டிவிட்டரில் ஒரு செய்தி வந்திருந்தது
இந்தியாவில் +2 பரீட்சையில் (ஏதோ ஒரு பரீட்சை சரியாக நினைவில்லை) பெண்கள் 60%ம் ஆண்கள் 40%ம் தேர்ச்சியாம். இலங்கையில் ஆண்கள் 60% பெண்கள் 40%தான் தேர்ச்சியாம். இதிலிருந்து எடுத்த முடிவு இலங்கையில் பெண்ணடிமைத்தனம் ஜாஸ்தி. ஒரு காமெடியான பதிவாக இருந்தாலும் இந்த பதிவில் நான் மறுதலைக்கருத்து பகிர்ந்தேன். ”இந்தியாவில் ஆண் அடிமைத்தனம் ஜாஸ்தி என்ற முடிவுக்கு ஏன் வரமுடியாது?” என கேட்டிருந்தேன். இதற்கு அநத் நண்பர் இட்ட கருத்து “அமரேசுக்கு பெண்கள் மீது ஏதோ வக்கிரம் இருப்பதை நான் தொடர்ந்து அவதானித்து வருகிறேன்” என்பது தான்.

ஆக இந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான கருத்துகள் கண்மூடித்தனமான ஒரு பாலின கவர்ச்சியை ஏற்படுத்தவும், பெண்ணடிமைத்தனத்தை கொண்டிருப்பவர்கள் தான் ஆண்கள் என்கிற நிலையை ஏற்றுக்கொள்ளவும் இந்த சமுதாயம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஒரு பெண் அடிமைப்படுத்தப்பட்டால் அதற்காக போராடி அந்த பெண்ணை மீட்க வேண்டும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியவரை தண்டிக்க வேண்டும் அல்லது திருத்த வேண்டும். இது நியாயம். ஆனால் ஒரு பெண்ணின் சம்பவத்தை பொதுமைப்படுத்தி முடிவெடுப்பது அபத்தமானது, ஒரு ஆண் வக்கிரம் கொண்டு செயற்பட்டால் அவன் ஆண்மையிழந்தவனாக காட்ட முற்றபடலாமே தவிர அவன் ஆண்களுக்கேயுரிய சிறப்பியல்பை கொண்டிக்குக்கிறான் என அவனை பதவி உயர்த்துவது கேவலமானது, கீழ்த்தரமானது.

ஒருதடவை எனது முகப்புத்தக நண்பர் ஒருவர் (அவர் ஒரு பெண்) இந்துமதத்தில் கணவர்மார்களின் நலன் கருதி மனைவிமார் இறைவனை வேண்டுவதற்காக விரதங்கள் இருப்பதாகவும், கணவன்மார் மனைவியின் நன்மைவேண்டி விரதங்கள் அனுஷ்டிக்க எந்த விரதமும் இல்லை எனவும் கூறி அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என ஒரு நிலைத்தகவல் பதிந்திருந்தார். பல ஆண்கள் உட்பட அவரது கருத்தை வழிமொழிந்து கருத்தூட்டம் செய்து இருந்தனர். நான் வேறுபட்ட கோணத்தில் அணுகினேன்.

பண்டைய காலங்களில் வேட்டை, மீன்பிடித்தல் போன்ற தொழில்கள் அதிகமாக இருந்திருக்கும். ஆண்கள்-அதாவது கணவன் மார்-வேலைக்காக நீண்டதூரம் செல்வதும், மனைவிமார் வீட்டுப்பணிகளை பார்த்து சமையல் செய்து வாழ்ந்ததும் இயல்பாக இருந்தது. வெளியில் செல்லும் கணவன் மார் பிரச்சனைகளின்றி வீடு வந்து சேருவரோ என்ற ஏக்கம் மனைவியரிடத்தில் இருந்திருக்கும். தினமும் அவர்கள் இப்படி ஏங்கி வாழ்வது அசௌகரியமாக இருக்கும் என்பதால், ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்கள் கணவர்மாரின் நலன் கருதி இறைவனை பிரார்த்தித்தால் பிற நாட்டகளிலும் இறைவன் பார்த்துக்கொள்ளுவார் என்ற அடிப்படையில் அந்த விரதங்கள் அனுஷ்டிக்கப்பட்டிருக்கலாம். தொழில் செய்துவரும் கணவர்மார் நீண்ட தூரபயணம் முதல்கொண்டு பல காரணங்களால் விரதமிருப்பதை வழக்கமாக்காமல் விட்டிருக்கலாம். ஆக இந்த தவறான வழமைக்கு காரணம் ஆணாதிக்கம் இல்லை, புராதன வழமையை புதுப்பிக்காதது மாத்திரமே. இப்போது இருவரும் வேலைக்கு செல்கிறார்கள் என்கின்ற நிலையில் இருவருமே விரதமிருக்காமல் விடலாம். அல்லது மனைவியும் என்னைப்போலதானே சமுகத்தில் வாழ்கிறாள் ஆகவே அவளுக்காக நானும் விரதமிருப்போமே என நினைத்து இருவரும் விரதமிருக்கலாம். இந்த updation செய்யாதது மாத்திரம் தான் தவறு. என்று நான் கருத்து பகிர்ந்திருந்தேன். அந்த கருத்து யாருக்குமே நீயாயமானதாகவோ அல்லது வாதத்திற்கு உட்படுத்தக்கூடியதாகவோ தெரியவில்லை. அந்த நிலைத்தகவலை இட்ட அந்த அக்கா, தனது அடுத்த நிலைத்தகவலாக இன்னொரு ஆணாதிக்க கருத்தை பதிவு செய்துவிட்டார்.

இந்த சம்பவத்தில் நான் சொல்லவரும் விடயம் என்னவெனில், ஆணாதிக்கம் என்பதுபற்றிய அடிப்படை புரிதல்கள் இன்றிய ஒரு சமுகம் ஆணாதிக்கத்தைப்பற்றி பேசுகிறது. ஆணாதிக்கப்பண்பு என்னிடம் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டால் தான் நான் ஒரு ஆணாக இருக்க முடியும் அல்லது நடுநிலையான ஆணாக இருக்க முடியும் என்னும் நிலை வந்துவிட்டது. நான் ஒரு ஆண் நன்பனை கெட்டவார்த்தையால் திட்டினால் அது எனது நல்ல/கெட்ட பழக்கவழக்கங்களாக பதிவு செய்யப்படும். அதே நான் ஒரு பெண்ணை அவ்வாறு பேசிவிட்டால் அது just ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக பதிவு செய்யப்பட்டு விடுகிறது. என்னைப்பொறுத்தவரை இரண்டும் ஒரே மாதிரியாக பார்க்கப்பட வேண்டும். இரண்டும் எனது நற்பண்பு சார்ந்ததே.

தொடரும்……………………….

3 comments:

  1. I appreciate n accept most of ur article, I am a feminist but that doesn't mean I can endorse feminine fundamentalism against men. We want equality but not feminine supremacy. Go ahead bro,

    ReplyDelete