Sunday, September 5, 2010

யாழ் மண்ணின் மைந்தர்களை அவமதித்தது "பலம்"



நல்லைக்கந்தனின் உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பிரபல கல்லூரி மைதானத்தில் “பலம்” நடாத்திய இசை நிகழ்ச்சி கடந்த இரு தினங்களாக மேடையேற்றப்பட்டிருக்கிறது.இன்றைய தினமும்(05-09-2010) அந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்ற போதிலும் இன்று தென்னிந்திய கர்நாடக சங்கீத மேதைகளில் ஒருவர் கலந்து கொள்ளவுள்ளார். கடந்த இரு தினங்களும் உள்ளூர் கலைஞர்களின் கலைப்படைப்பு இடம்பெற்றது.
முதல் நாள் நிகழ்வுகளுக்கு ஓரளவு ஜனக்கூட்டம் வந்திருந்த போதிலும் இரண்டாம் நாள் நேற்று அவ்வளவாக ரசிகர்கள் ஆரம்பத்தில் இருக்கவில்லை. மாலை 6  மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சி 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று யாழ்மண்ணின் புகழ்பூத்த மைந்தர்களின் கலைப்படைப்புகள் அரங்கேறியிருந்தன. ஆனால் தொழில் ரீதியாக அறிவிப்பாளர்களாக(பின்னதாக அவர்கள் தொழில் ரீதியான அறிவிப்பாளர்கள் அல்ல என தெரிவிக்கப்பட்டனர்)கடமையாற்றும் பலத்தின் அறிவிப்பாளர்கள் தரக்குறைவான முறையிலே அறிவிப்புகளை நிகழ்த்தியது பலரது ஆச்சரியத்தையும் தூண்டிவிட்டது. தவறான சொற்கோவைகளுடன் கருத்துக்களற்ற வசனங்களை அறிவித்தார்கள். மேலும் சொன்ன வசனங்களை அந்த வசனத்தின் சொற்களின் ஒழுங்குகளை மாற்றி மாற்றி மீண்டும் மீண்டும் கருத்துக்களற்ற ஒலியை ஒலிவாங்கிமூலம் எழுப்பினார்கள்.
தொடர்ச்சியாக கதைக்க வேண்டும் எண்ற காரணத்திற்காக உபாதை ஏற்பட்டவர்கள் போல் தமிழை உச்சரித்தார்கள்.
சரி அதை தான் விடுவம். ஆனால் அவர்கள் இத்துடன் நிறுத்தவில்லை. நேற்று யாழ்மண்ணின் புகழ்பூத்த இளம் பாடகி ஒருவர் முதலாவதாக அரங்கில் அமர்ந்ததும் அறிவிப்பாளர்கள் தமது அறிமுகத்தில் “உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் 30 நிமிடங்கள்” என பட்டிமண்றில் நேரக்கட்டுப்பாடு வழங்கும் நடுவர் போல் நடந்துகொண்டார்கள்.சரியாக 30 நிமிடத்தில் கலைஞர் அவர்கள் முடித்திருந்தார்.அதற்கு ”உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் முடித்ததற்கு நண்றிகள்” என்று கூறினர்.

அடுத்ததாக பல உலக நாடுகளில் வயலின் கச்சேரி நடாத்திய இசை வல்லுநர் ஒருவரின் வயலின் கச்சேரி. அவரிற்கும் அதே பாணியில் “உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் முடித்துவிட வேண்டும்” என அறிவித்தார்கள். அவரும் நேரத்திற்குள்ளே முடித்து இவர்களின் பாராட்டை பெற்றார்.
அடுத்த்தாக யாழ் மண்ணின் புகழ்பூத்த பண்ணிசை மன்னனின் பண்ணிசை நிகழ்வு ஆரம்பமாகிய போது அறிவிப்பாளர் மீண்டும் “உங்களுக்கான எமது நேரம் ஒரு மணித்தியாலம்.இப்பொழுது சரியாக 9.25 நீங்கள் சரியாக 10.25 ற்கு முடித்து விட வேண்டும்” என மீண்டும் ஒரு தரம்குறந்த ரீதியில் கட்டளை விதித்தனர்.
நேரடி (live programe) நிகழ்ச்சிகளில் இவ்வாறு அறிவிப்பது பொருத்தமற்றது என்பதை இவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.
மேலும் கர்நாடக சங்கீத இசைக்கு தேவையில்லாத வகையில் அதன் தராதரத்தை குறைக்கும் வகையில் வர்ண ஒளி விளக்குகளையும் பொருத்தி பாடகர்களின் கவனத்தை சிதைத்ததுடன் அவர்கள் எழுதிவந்த பாடல்களை பார்த்து படிக்க வசதிகள் செய்து கொடுக்க தவறினர்.அவர்கள் மேடையில் இருந்த்து வெளிச்சம் கேட்ட போதும் அது 30 நிமிடங்களின் பின்னரே வழங்கப்பட்ட்து.
மேடையில் முதன்மை ஒலியெழுப்பி தவறான முறையில் அமைக்கப்பெற்றிருந்தது பாடுவதற்கு கடினமாக இருக்கிறது எண்று பலமுறை கூறியும் ஒழுங்கமைப்பாளர் யாரும் அதை பொருட்படுத்தாதையடுத்து மேடையில் இருந்தவாறே ஒலிவாங்கியில் ”மேடையில் இருக்கும் இந்த ஒலியெழுப்பியின்  சத்தம் அதிகமாக இருப்பதால் சரியாக பாட முடியவில்லை” என சொல்லப்பட ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியின் குளறுபடிகள் அதிகரித்து சென்றது.அனுசரணையாளர்கள் கூட 10 மணிக்கு தமது கொட்டில்களை மூடி வெளியேறினர்.மக்களும் வெளியேறினர்.ஆனால் கலைஞர்களின் மேலுமொரு நிகழ்வு மீதமிருக்க மைதானத்தில் 10 பேர் இருந்தனர்.

இப்படியாக இசைக்கு எந்தவிதத்திலும் மரியாதை கொடுக்கப்படாமல் நிகழ்வுகளை நடாத்தி இருந்தனர். உள்ளூர் கலைஞர்கள் என்றால் இழிவானவர்கள் என்ற எண்ணம் அறிவிப்பாளர் மனதில் இழையோடியது தெளிவாக தெரிந்தது.ஆனால் இன்று தென்னிந்திய கலைஞர்அவர்களிற்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள்.
அவர்களது மேடையில் சம்பந்தமற்ற விதத்தில் மாபெரும் தர்மச்சக்கரங்கள் 2 காணப்படுகிறது. அதற்கும் அர்த்தம் புரியவில்லை.

ஏதோ நாங்களும் நிகழ்ச்சி செய்ய வெண்டும் என நிகழச்சி ஒன்றை ஏற்பாடு செய்து உல்லாசமாக நேரத்தை கழிக்கின்றனர் பலம் குழுவினர்.இதில் இழிவாக்கப்படுவது கலையை பொக்கிஷமாக காத்து வழிபட்டு ஆராதிக்கும் யாழ் கலைஞர்களே…..